புழுதிவாக்கம் – மோசமான சாலையால் மக்கள் அவதி; இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கின்றனர்

புழுதிவாக்கம் பகுதியில் சாலைகள் பராமரிப்பு இல்லாமல் இருப்பதால், தினமும் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் கடும் சிரமத்தை அனுபவித்து வருகின்றனர். சென்னை மாநகராட்சி 14வது மண்டலம், 186-வது வார்டு, பஜனை கோயில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் புதிய சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.

பல சாலைகள் அமைக்கப்பட்டுவிட்டாலும், பஜனை கோயில் தெருவில் மட்டும் பணி நிறைவேற்றப்படவில்லை. பேருந்து நிலையத்துக்கு செல்லும் இந்த பிரதான சாலையில் மில்லிங் பணி தொடங்கிய நிலையில், சாலை அமைக்கும் வேலை பாதியில் நிற்கப்பட்டது.

சமீபத்திய மழையால் சாலை முற்றிலும் சேறும் சகதியுமாகி, பள்ளங்கள், குண்டுகள் அதிகரித்துள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அபாயத்தில் சாலையில் பயணிக்கின்றனர். குறிப்பாக இருசக்கர வாகனத்தில் செல்லுபவர்கள் கீழே விழுந்து படுகாயம் அடையும் நிலை ஏற்பட்டுள்ளது. சாலையை சரிசெய்யாத மாநகராட்சியால் பொதுமக்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர்.

அப்பகுதி மக்கள் கூறுகையில்:

“குடிநீர் வாரியமும் மாநகராட்சியும் ஒருங்கிணைந்து பணியாற்றாததால் சாலை சீரமைப்பு தாமதமாகியுள்ளது. முதலில் குடிநீர் பணி முடிந்திருக்க வேண்டும். ஆனால் தாமதம் காரணமாக பிரச்னை நீடிக்கிறது. வார்டு மாமன்ற உறுப்பினரும் எங்களது சிரமத்தை கவனிப்பதில்லை. இந்த சாலையில் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலையில் இருசக்கர வாகனத்தில் செல்கிறோம். மாநகராட்சி ஆணையர் உடனடியாக தலையிட்டு தீர்வு காண வேண்டும்” என்றனர்.

இதுகுறித்து 14வது மண்டல உதவி பொறியாளர் தெரிவித்ததாவது:

“பஜனை கோயில் தெரு உள்ளிட்ட பல சாலைகளில் மில்லிங் பணி செய்யப்பட்டு, குடிநீர் வாரியத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. பின்னர் பைப் லைன் புதியதாக அமைக்கப்பட வேண்டும் என வாரியம் கூறி, ரூ.98 லட்சம் செலுத்தியுள்ளது. அதனால் சாலை அமைப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இன்னும் ஓரிரு நாட்களில் பணிகள் முடிந்து சாலை அமைக்கப்படும்” என்றார்.

இதையே மாமன்ற உறுப்பினர் ஜெ.கே. மணிகண்டனும் உறுதிப்படுத்தினார்.

Facebook Comments Box