பாமகவிலிருந்து அன்புமணி நீக்கம்: ராமதாஸ் அதிரடி உத்தரவு
பாட்டாளி மக்கள் கட்சியின் செயல் தலைவர் மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவிகளில் இருந்து அன்புமணியை நீக்குவதாக கட்சியின் நிறுவனர் ராமதாஸ் இன்று அறிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் தோட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்த முடிவை அறிவித்தார்.
மேலும், இனி அன்புமணி தனது பெயரில் “இரா” என்ற இனிஷியலை மட்டுமே பயன்படுத்த வேண்டும்; “ராமதாஸ்” என்ற பெயரைச் சேர்க்கக் கூடாது என்றும் ராமதாஸ் கடுமையாகத் தெரிவித்துள்ளார்.
கடந்த சில மாதங்களாகவே, ராமதாஸ்–அன்புமணி இடையே கருத்து முரண்பாடு நிலவி வந்தது. குறிப்பாக, ராமதாஸ் முகுந்தனை பாமக இளைஞரணித் தலைவராக நியமித்தது அன்புமணியின் அதிருப்தியை அதிகரித்தது. இதனால், தந்தை–மகன் மேடையிலேயே வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் சமரசம் செய்வதற்கான முயற்சிகள் பல நடந்தும் பலனளிக்கவில்லை.
இதையடுத்து, ராமதாஸ் அன்புமணிக்கு 2 முறை நோட்டீஸ் அனுப்பி, குற்றச்சாட்டுகளுக்கான விளக்கத்தை செப்டம்பர் 10க்குள் அளிக்க வேண்டும் என கெடு வைத்திருந்தார். ஆனால், அன்புமணி எந்தவித பதிலும் அளிக்காததால், இன்று இறுதியாக கட்சி விரோத நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.
செய்தியாளர் சந்திப்பில் ராமதாஸ் கூறியதாவது:
“பாமக பொதுக்குழு முன்வைத்த 16 குற்றச்சாட்டுகளுக்கும் அன்புமணி பதில் தரவில்லை. எழுத்து மூலமாகவோ, நேரில் சந்தித்தோ விளக்கம் அளிக்காமல் இருந்ததால், அவர் குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொண்டதாகவே கருதப்படுகிறது. எனவே, அன்புமணியை செயல் தலைவர் மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவிகளில் இருந்து நீக்குகிறேன்.
அன்புமணியுடன் இருந்தவர்கள் திரும்ப விரும்பினால், அவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க தயார். மூத்தவர்கள் அறிவுரை கூறினாலும், அன்புமணி அதை ஏற்கவில்லை. அவர் அரசியல்வாதியாகத் தகுதியற்றவர். இனி தனது பெயருக்கு “இரா” என்ற இனிஷியலை மட்டுமே பயன்படுத்தலாம். ‘ராமதாஸ்’ என்ற பெயரை அவர் பின்னால் சேர்க்க முடியாது,” என்றார்.