அரியலூரிலிருந்து சென்னைக்கான 3 புதிய பேருந்து சேவைகள் – அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்
அரியலூர் பேருந்து நிலையத்தில் இன்று (செப்டம்பர் 11) நடைபெற்ற நிகழ்ச்சியில், போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் சென்னைக்கு 3 புதிய பேருந்து சேவைகளை தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:
“சிஐடியு தொழிற்சங்கம் நீண்டகாலமாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. அவர்களை அழைத்து பேசியுள்ளோம். தமிழ்நாடு வரலாற்றில் இல்லாத வகையில், மூன்று ஆண்டுகளில் இரண்டு முறை ஊதிய உயர்வு ஒப்பந்தம் செய்து முடித்துள்ளோம்.
கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் ஒரு ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை நிறைவேற்ற 30 முறை மேல் பேச்சுவார்த்தை நடந்தும், ஆட்சி முடியும் வரை நிறைவேற்றப்படவில்லை. ஆனால் திமுக ஆட்சியில் ஒருமுறை 5% மற்றும் மறுமுறை 6% ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது. ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கான பணப் பலன்களுக்காக ரூ.1,100 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாண்டு ஓய்வு பெறுவோருக்கான நிதி வழங்கும் பணியும் வேகமாக நடைபெறுகிறது.
முன்பு புதிய ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. இப்போது அவற்றை நிரப்பும் பணிகள் தொடங்கியுள்ளன. அதிமுக ஆட்சியில் புதிய பேருந்துகள் வாங்கப்படவில்லை. மு.க. ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்ற பிறகு, 11,000 பேருந்துகள் வாங்க நிதி ஒதுக்கப்பட்டு, அதில் 4,000 பேருந்துகள் ஏற்கனவே பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. இதனால் போக்குவரத்துத் துறை மக்களின் பாராட்டைப் பெற்றுள்ளது.
தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் மக்களுக்கு அதிகப்படியான சேவை செய்து வரும் போக்குவரத்துத் துறையை ஆதரிக்கும் வகையில், சிஐடியு தொழிற்சங்கத்தினர் தங்களது போராட்டத்தை வாபஸ் பெற வேண்டும்.
அதிமுக–பாஜக கூட்டணியில் நடைபெறும் நாடகம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. அதன் முடிவை பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் தீர்மானிக்கும். தமிழகத்தில் தொடர்ந்து 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த அதிமுக, அப்போது செய்யாதவற்றை இப்போது செய்வதாகச் சொல்வது அரசியல் நாடகம் மட்டுமே.
திமுக அரசு கொடுத்த வாக்குறுதிகளில் 85% நிறைவேற்றப்பட்டுள்ளது. கூடுதலாக புதுமைப்பெண் திட்டம், தமிழ்ப்புதல்வன் திட்டம், காலை உணவு திட்டம் போன்றவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அதிமுகவின் பொய்யான வாக்குறுதிகளை மக்கள் கண்டுகொள்ளமாட்டார்கள்.
சில திட்டங்கள் மத்திய அரசின் அனுமதி தேவைப்படுவதால் தாமதமாகின்றன. எஞ்சியவற்றை இடைப்பட்ட காலங்களில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
பிஹார் மாநில தேர்தலை முன்னிட்டு பாஜக அங்கு அதிக அக்கறை காட்டுகிறது. அதனால் சாலை, ரயில் போக்குவரத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் வாக்குத்திருட்டை மக்கள் எதிர்த்து வருகிறார்கள். உச்ச நீதிமன்றம் வரை வெளிப்படையாக விவாதம் நடந்தும், பிஹாரில் பாஜக வாக்கு மோசடி மூலம் ஆட்சியைப் பிடிக்க முயன்றுள்ளது.
அதற்கு எதிராக மக்கள் பெருமளவில் திரண்டனர். ராகுல் காந்தி மற்றும் தேஜஸ்வி யாதவ் தலைமையில் நடந்த இந்த எதிர்ப்பு பேரணியை நாடு முழுவதும் மக்கள் கவனித்தனர். பிஹார் மக்கள் பாஜக நடவடிக்கைக்கு தகுந்த பதில் தருவார்கள்,” என்றார் அமைச்சர் சிவசங்கர்.