தூய்மை பணியாளர் கைது விவகாரம்: விரிவான பதிலை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னையில் தூய்மை பணியாளர்கள் கைது செய்யப்பட்ட சம்பவத்தில், காவல்துறையினர் மனித உரிமை மீறியதாக குற்றச்சாட்டு எழுந்த வழக்கில், விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியின் தூய்மை பணிகளை தனியாரிடம் ஒப்படைக்க எதிர்ப்பு தெரிவித்து, ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் ரிப்பன் கட்டிடத்தின் முன்பு தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். இதன் போது, ஆகஸ்ட் 13-ஆம் தேதி நள்ளிரவில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.

அப்போது, காவல்துறையினர் தாக்குதல் மற்றும் பாலியல் தொல்லை வழங்கியதாக குற்றம்சாட்டி, ஜோதி உட்பட 12 பெண் தூய்மை பணியாளர்கள் வழக்கு தொடர்ந்தனர். அதில், மனித உரிமை மீறல் குற்றச்சாட்டை மாநில மனித உரிமை ஆணையமும், பாலியல் தொல்லை குற்றச்சாட்டை மகளிர் ஆணையமும் விசாரிக்க வேண்டும் என்றும், பொறுப்புக்கூறிய காவலர்களுக்கு தண்டனை வழங்கி, பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கோரினர்.

இந்த மனு தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள், 1400 பெண் தூய்மை பணியாளர்களை கலைக்க ஆயிரம் ஆண் காவலர்கள், 200 பெண் காவலர்கள் மட்டுமே வந்ததாக சுட்டிக்காட்டினர்.

அரசு தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், போராட்டக்காரர்களை அமைதியாக கலைந்து செல்லுமாறு கேட்டும் மறுத்ததால் கைது செய்ய நேர்ந்தது. மேலும், சட்டவிரோத கும்பல் நுழைந்து பேருந்துகளை சேதப்படுத்தியதாகவும் வீடியோ ஆதாரங்கள் உள்ளதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து தலைமை நீதிபதி, போராட்ட அனுமதி இல்லாமல் நடப்பது தவறானது. அரசு கொள்கை முடிவை எதிர்க்க, சட்டரீதியாக அணுக வேண்டும்; அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே போராட்டம் நடத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

பின்னர், அனைத்து ஆதாரங்களுடனும் விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை மூன்று வாரங்களுக்கு ஒத்திவைத்தது.

Facebook Comments Box