“அதிமுக செய்யவேண்டியது, செய்யக்கூடாதது அமித் ஷா தீர்மானிப்பாரா?” – ஆ.ராசா விமர்சனம்
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா எம்.பி ஆகியோர் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது ஆ.ராசா,
“தமிழ்நாட்டின் மண், மொழி, மானத்தை காக்கவும், கூட்டாட்சி கொள்கையை அழிக்கும் ஒன்றிய அரசுக்கு எதிராகவும், இதுவரை எந்தக் கட்சியும் செய்யாத முயற்சியை முதலமைச்சர் ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற பெயரில் தொடங்கினார். ஜூலை 1-ஆம் தேதி ஆரம்பித்த இந்த முயற்சியில் 7 லட்சம் தொண்டர்கள் பங்கேற்றனர். 70 நாட்களில் 68 ஆயிரம் வாக்குச்சாவடிகளுக்கும் சென்று, ஒரு கோடிக்கும் மேற்பட்ட குடும்பங்களை இணைத்து முதல்கட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளோம்.
செப்டம்பர் 15-ஆம் தேதி ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் குடும்பங்கள் உறுதிமொழி ஏற்கின்றன. அவற்றை தொகுத்து, செப்டம்பர் 17-ஆம் தேதி கரூரில் நடைபெறும் முப்பெரும் விழாவில் எங்கள் தலைவர் மக்கள்முன் அறிவிப்பார். தொடர்ந்து செப்.20, 21 ஆகிய தேதிகளில் மாவட்ட அளவில் தீர்மான விளக்கக் கூட்டங்கள் நடைபெறும். இதில் பொதுமக்கள், வணிகர்கள், பெண்கள் என அனைவரும் பங்கேற்பர்.
‘தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம்’ என்ற முழக்கம் மாநிலம் முழுவதும் ஒலிக்க செய்யும் முயற்சி இது. இந்திய அரசியலில் இதுபோல் ஒரு பெரிய இயக்கம் எதுவும் நடக்கவில்லை என்பது இதன் தனிச்சிறப்பு” என்றார்.
பின்னர் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த ஆ.ராசா,
“ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் ஏற்கனவே ஒரு கோடிக்கும் மேற்பட்ட குடும்பங்கள் இணைந்துவிட்டனர். இதனை எடப்பாடி பழனிசாமி தன் இயலாமையால் விமர்சிக்கிறார். அதிமுக பாஜகவிடம் முழுமையாக சரணடைந்துள்ளது.
ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டாலும், செங்கோட்டையன் அமித் ஷாவை சந்தித்தாலும், எடப்பாடி பதறி விடுகிறார். யார் உண்மையில் ஆபத்தான நிலையில் இருக்கிறார்கள்? திமுக திடமாக இருக்கிறது. எடப்பாடி தான் தன் உடல்நலத்தை கவனிக்க வேண்டும்.
அதிமுகவில் எதைச் செய்ய வேண்டும், எதைச் செய்யக் கூடாது என்பதை அமித் ஷா தான் முடிவு செய்வாரா? செங்கோட்டையன் அமித் ஷாவை சந்தித்து பேசினார்; ஆனால் அவர்கள் என்ன பேசினார்கள் என்பதை யாரும் சொல்லவில்லை. இந்த இரகசியத்துக்கு என்ன பெயர்? மாறி மாறி சென்று மண்டியிடும் நிலை தான் அதிமுகவின் நிலைமை. அதனால் தான், தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம் என்கிறோம்.
பாஜக, உச்சநீதிமன்றம், நாடாளுமன்றம், தேர்தல் ஆணையம் உள்ளிட்ட அனைத்து அரசியல் அமைப்புகளையும் பாதிக்கிறது. நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தாமல் மசோதாக்கள் நிறைவேற்றப்படுகின்றன. எங்கள் கூட்டணியில் கருத்து முரண்பாடுகள் இருந்தாலும், மாநில சுயாட்சி, சகோதரத்துவம், சுதந்திரம், மதச்சார்பின்மை ஆகிய அரசியல் சாசனக் கொள்கைகளை காப்பதற்காக நாங்கள் ஒன்றிணைந்துள்ளோம்” என்று விமர்சித்தார் ஆ.ராசா.