ஓசூர் முதலீட்டாளர் மாநாட்டில் ரூ.24,307 கோடி முதலீட்டுக்கு ஒப்பந்தங்கள் – முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்து

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் நேற்று முதலீட்டாளர் மாநாடு நடைபெற்றது. இதில் முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில், ரூ.24,307 கோடி முதலீட்டில் 49,353 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் 92 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

மேலும், ரூ.250 கோடி முதலீட்டில் 1,100 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் 3 திட்டங்களை தொடங்கி வைத்தார். ரூ.1,210 கோடி முதலீட்டில் 7,900 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் 4 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

முதல்வர் உரை

நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின், “ஜெர்மனி, இங்கிலாந்து பயணத்தின் மூலம் ரூ.15,516 கோடி முதலீடுகளை ஈர்த்தேன். அடுத்த மூன்று நாட்களில், ஓசூரில் நடந்த இந்த மாநாட்டில் ரூ.24,307 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. நாங்கள் சாதனையை முறியடிக்கிறோம்.

நாங்கள் ஆட்சிக்கு வந்த பின் கையெழுத்தான ஒப்பந்தங்களில் 77% செயல்பாட்டிற்கு வந்துவிட்டன. கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தொழில் வளர்ச்சி ஓசூரில் நடந்துள்ளது. இதனால் தொழிற்சாலைகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. இ-ஸ்கூட்டர் உற்பத்தியில் ஓசூர் தலைநகரமாக திகழ்கிறது.

முதலீட்டாளர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும். தமிழகத்துடன் இணைந்தால் வெற்றி உறுதி. எனவே, எப்போதும் தமிழகத்தில் முதலீடு செய்யுங்கள்” என்றார்.

அவர் மேலும், உலக புத்தொழில் மாநாடு அக்டோபர் 9, 10-ஆம் தேதிகளில் கோயம்புத்தூரில் நடைபெறவுள்ளதாகவும், இது உலகம் முழுவதுமிருந்து தொழில்முனைவோர்கள், முதலீட்டாளர்கள் பங்கேற்கும் சிறப்பான நிகழ்வாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.

புதிய திட்டங்கள்

விஸ்வநாதபுரம் எல்காட் தொழிற்பூங்காவில், அசென்ட் சர்க்யூட்ஸ் நிறுவனம் ரூ.1,100 கோடி முதலீட்டில் 1,200 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் திட்டத்துக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார்.

அதேபோல், கிருஷ்ணகிரி அருகே குருபரபள்ளி தொழிற்பூங்காவில் உள்ள டெல்டா எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் ரூ.450 கோடி முதலீட்டில் 400 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் இரண்டு விரிவாக்கத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். மேம்படுத்தப்பட்ட உற்பத்தி வரிசையையும் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்வில் தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, மாவட்ட ஆட்சியர் தினேஷ் குமார், எம்.பி. கோபிநாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர். டெல்டா எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் தலைவர்கள் பிங்க் செங், ஜேம்ஸ், மார்க்கோ ஆகியோரும் கலந்துகொண்டனர்.

Facebook Comments Box