“உதயநிதி சொன்னது உண்மையே” – டிடிவி தினகரன்
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியதாவது:
“அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி இருக்கும் வரை, திமுக வெற்றி உறுதியாகும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வஞ்சப்புகழ்ச்சியாகக் கூறியிருந்தாலும், உண்மையைத்தான் வெளிப்படுத்தியிருக்கிறார்.
2021 சட்டமன்றத் தேர்தலின் போது, தேவர் திருமகனாரின் பெயரை மதுரை விமான நிலையத்துக்கு சூட்ட வேண்டும் என்றும், அவருக்கு பாரத் ரத்னா விருது வழங்கப்பட வேண்டும் என்றும், தென் தமிழக மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்றும், அமமுக தேர்தல் அறிக்கையிலேயே உறுதியளித்திருந்தோம்.
அந்தத் தேர்தலுக்கு முன்பு, பழனிசாமி 10.5% இடஒதுக்கீட்டை அறிவித்ததால் தென் தமிழகம் முழுவதும் 105 சமூக மக்கள் மகிழ்ச்சி அடைந்த சூழல் ஏற்பட்டது. அதன்படி விமான நிலையத்திற்கு தேவர் திருமகனாரின் பெயரை வைக்க வேண்டும் என்ற பழனிசாமியின் கோரிக்கையை நான் பொதுவான கருத்தாகச் சொன்னேன். ஆனால், அதை சிலர் தவறாக புரிந்து கொண்டு, அரசியல் நோக்கத்துடன் கூறினேன் என தூண்டப்படுகிறார்கள்.
அமமுக எப்போதுமே அனைத்து சமூகங்களுக்குமான இயக்கமாகவே செயல்பட்டு வருகிறது. நயினார் நாகேந்திரன் என் நல்ல நண்பர்; எப்போதும் என்னை சந்திக்கலாம். உதயநிதி ஸ்டாலின் கூறிய கருத்து சிறந்தது. எங்களது வெற்றியின் ரகசியமே பழனிசாமிதான் என்றும், அவர் அதிமுக பொதுச்செயலாளராக இருந்தால் எங்களுக்கு வெற்றி எளிதாகும் என்றும், அவர் நீண்ட நாட்கள் வாழ வேண்டும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.
அதிமுகவை ஒன்றிணைக்க முயற்சிக்கும் அனைவரும் இதனை புரிந்துகொள்ள வேண்டும். உதயநிதி வஞ்சப்புகழ்ச்சியாகக் கூறினாலும், உண்மையைச் சொன்னதே. தேர்தல் காலத்தில் எங்களுக்கு தேவையான கூட்டணியை நாங்கள் தீர்மானிப்போம். அமமுக சுதந்திரமாக செயல்படும்” என தினகரன் தெரிவித்தார்.