ஆனைமலை ஆறு – நல்லாறு திட்டம் அவசியம் நிறைவேற்றப்பட வேண்டும்: பழனிசாமி வலியுறுத்தல்
கேரள அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி, ஆனைமலை ஆறு – நல்லாறு திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே மடத்துக்குளத்தில் பேசிய அவர், “ஆனைமலை ஆறு – நல்லாறு அணைத் திட்டம் கோவை, திருப்பூர் மக்களின் பல வருடக் கோரிக்கை. தமிழகத்தில் திமுகவும், கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சியும் ஆட்சி செய்து, இரண்டும் இண்டியா கூட்டணியில் பங்கெடுத்துள்ளன. எனவே, தமிழக முதல்வர் கேரள அரசுடன் பேசி இந்த பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும்” என்றார்.
அவர் மேலும் கூறுகையில்:
“விவசாயிகளுக்கும், விவசாயத் தொழிலாளர்களுக்கும் திமுக அரசு துரோகம் செய்கிறது. எங்கள் ஆட்சியில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் 26,000 குளங்கள், குட்டைகள் சீரமைக்கப்பட்டன. அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் ‘தாலிக்கு தங்கம்’ திட்டம் விரிவாக்கப்பட்டு, மணமகளுக்கு பட்டுச்சேலை, மணமகனுக்கு பட்டு வேட்டி வழங்கப்படும்.
ஏழை மாணவர்களுக்கு இலவசமாக மடிக்கணினி வழங்கிய திட்டத்தில், 52 லட்சம் மாணவர்கள் ரூ.7,200 கோடி மதிப்பிலான பயனை பெற்றனர். இந்த திட்டத்தை திமுக அரசு நிறுத்தி விட்டது. மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்ததும் அந்தத் திட்டத்தையும், மடத்துக்குளம் விவசாயிகளின் நீண்டநாள் கோரிக்கையான அப்பர் அமராவதி அணைத் திட்டத்தையும் செயல்படுத்துவோம்” என்று தெரிவித்தார்.