திருவாரூர்: ஆற்றில் மூழ்கித் தத்தளித்த 2 சிறுவர்களை உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய பெண்!
திருவாரூர் மாவட்டம் திருநாட்டியாத்தங்குடி பிரதான சாலையைச் சேர்ந்தவர் கலியபெருமாள் மனைவி மாங்கனி (39). செப்டம்பர் 9-ஆம் தேதி, தனது வீட்டிற்கு எதிரே உள்ள வெள்ளையாற்று தடுப்பணை பகுதியில் குளிக்கச் சென்றிருந்தார்.
அதே நேரத்தில், அதே பகுதியைச் சேர்ந்த சிவசுப்பிரமணியன்-சத்தியகலா தம்பதியரின் மகன் ஹேம்சரண் (10), மேலும் பெரும்புகலூரைச் சேர்ந்த கலியபெருமாளின் மகன் கவியரசன் (11) ஆகியோர் அங்கு குளிக்க வந்தனர்.
அப்போது, படிக்கட்டில் அமர்ந்திருந்த கவியரசன் தவறுதலாக ஆற்றுக்குள் வழுந்தார். அவரை காப்பாற்ற ஹேம்சரண் கையைப் பிடித்தபோது, அவனும் நீரில் விழுந்தான். திடீரென இருவரும் தத்தளித்தனர். இதைக் கண்டு மாங்கனி உடனே ஆற்றுக்குள் குதித்து, தனது உயிரை பணயம் வைத்து சிறுவர்களை பிடித்து மேல் பகுதியிற்கு இழுத்து கொண்டு வந்தார்.
ஆற்றில் தண்ணீரின் வேகம் அதிகமாக இருந்ததால், இருவரையும் கரைக்கு தனியாகக் கொண்டு வர முடியவில்லை. அப்போது, மாங்கனி சத்தமிட்டதை கேட்டு அருகில் இருந்தவர்கள் விரைந்து வந்து, இருவரையும் பாதுகாப்பாக கரைக்கு கொண்டுவந்தனர்.
இந்தச் சம்பவத்தில், அதிகளவு நீர் குடித்து பாதிக்கப்பட்ட கவியரசன் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது நலமுடன் உள்ளார்.
மாங்கனியின் வீரத்திற்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இதுகுறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில்,
“பிறருக்கொரு துயரம் ஏற்பட்டால் முன் நின்று காப்பது தமிழரின் இயல்பும் பண்பும். அந்தப் பண்பின் தைரியமிகு வடிவமாக விளங்கும் சகோதரி மாங்கனிக்கு என் வாழ்த்துகளும் பாராட்டுகளும்” என்று பதிவிட்டுள்ளார்