இந்திய மருத்துவத் துறைக்கு முன்னோடி தமிழகமே: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெருமிதம்
“இந்தியாவின் மருத்துவத் துறைக்கு வழிகாட்டி மாநிலமாக தமிழகம் திகழ்கிறது” என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
அப்போலோ மருத்துவமனையில், முதல்வர் காப்பீடு திட்டத்தின் கீழ் 50-க்கும் மேற்பட்ட கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக நடைபெற்றன. இதை முன்னிட்டு, சென்னை கிண்டியில் நேற்று நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் அமைச்சர் கலந்து கொண்டு மருத்துவர்களை பாராட்டினார்.
அமைச்சர் தனது உரையில் கூறியதாவது:
2009ஆம் ஆண்டு தமிழகத்தில் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டம் அறிமுகமானது. பின்னர், 10 ஆண்டுகள் கழித்து, அதனை நாடு முழுவதும் செயல்படுத்த பிரதமர் விருப்பம் தெரிவித்துள்ளார். அதன்படி, 2018 முதல் இந்தியா முழுவதும் பிரதமர் காப்பீடு திட்டம் நடைமுறைக்கு வந்தது.
அதேபோல், தமிழகத்தில் வெற்றிகரமாக நடைபெற்று வரும் மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் பற்றியும், இன்னுயிர் காப்போம் – நம்மை காக்கும் 48 திட்டம் பற்றியும் மத்திய சுகாதாரத் துறை அதிகாரிகள் ஆர்வத்துடன் கேட்டறிந்தனர். இவை இந்தியா முழுவதும் செயல்படுத்தப்படவுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம், மருத்துவத் துறையில் தமிழகமே முன்னுதாரணமாக இருந்து வருகிறது.
தற்போது, 1.47 கோடி குடும்பங்கள் காப்பீடு திட்டத்தின் கீழ் பலனடைந்து வருகின்றன. ஆரம்பத்தில் 1,450 சிகிச்சைகளுக்கு மட்டுமே காப்பீடு வழங்கப்பட்ட நிலையில், இப்போது அது 2,053 சிகிச்சைகளாக உயர்த்தப்பட்டுள்ளது என்றார்.
இந்நிகழ்ச்சியில் சுகாதாரத் துறை செயலர் பி.செந்தில்குமார், மாற்று அறுவைச் சிகிச்சை ஆணைய செயலர் என்.கோபாலகிருஷ்ணன், அப்போலோ மருத்துவமனை இயக்குநர் சிந்தூரி ரெட்டி, கல்லீரல் மாற்று துறை தலைவர் இளங்குமரன், அப்போலோ சென்னை பிராந்திய நிர்வாகி இளங்குமரன் கலியமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.