அரசு ஒதுக்கீட்டு மருத்துவ மாணவர்களிடம் கூடுதல் கட்டணம்: தனியார் கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் – ராமதாஸ் வலியுறுத்தல்
அரசு ஒதுக்கீடு செய்யப்பட்ட மருத்துவ மாணவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் 2,091 அரசு ஒதுக்கீட்டு மருத்துவ இடங்கள் உள்ளன. அதில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 1,823, தனியார் மருத்துவ பல்கலைக்கழகங்களில் 268 இடங்களும் உள்ளன. மேலும், பல் மருத்துவத்தில் 1,360 அரசு ஒதுக்கீட்டு இடங்கள் உள்ளன.
2025–26 கல்வியாண்டுக்கான எம்பிபிஎஸ், பி.டி.எஸ் சேர்க்கைக்கு முதல் கட்ட கலந்தாய்வு முடிவடைந்த நிலையில், இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடைபெற உள்ளது. அரசு நிர்ணயித்தப்படி தனியார் மருத்துவக் கல்லூரிகளில் ஒதுக்கீட்டு இடங்களுக்கான ஆண்டுக்கட்டணம் ரூ.4.35 லட்சம் முதல் ரூ.4.50 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆனால், ஏற்கனவே சேர்க்கை பெற்ற மாணவர்களிடம் ரூ.5 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை கூடுதல் கட்டணம் கட்டும்படி பல தனியார் கல்லூரிகள் அழுத்தம் கொடுத்து வருவதாக பெற்றோர்கள் புகார் அளித்து வருகின்றனர். மேலும், இதைப் பற்றி வெளியே கூறினால், மருத்துவக் கல்வி தொடர முடியாது என அச்சுறுத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது.
உச்ச நீதிமன்றமும், உயர்நீதிமன்றமும் இதுபோன்ற செயல்களை கடுமையாக எச்சரித்துள்ளன. மருத்துவக் கல்வி இயக்குநரகமும் கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இருந்தபோதும், பெரும்பாலான தனியார் கல்லூரிகள் விதிமீறல் செய்வது கவலைக்குரியது.
ஏழை மற்றும் நடுத்தர வர்க்க மாணவர்கள் அரசு ஒதுக்கீடு மூலமாகவே மருத்துவம் படிக்க விரும்புகிறார்கள். அவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பது, அவர்களின் மருத்துவக் கனவுகளை முறியடிக்கிறது. ஏற்கனவே நீட் தேர்வுக்கான பயிற்சியில் பெரும் தொகை செலவழித்த பெற்றோர்கள் கூடுதல் கடன் சுமையால் தவிக்கின்றனர்.
எனவே, மாநில அரசு உடனடியாக தலையிட்டு தனியார் கல்லூரிகளின் அதிக கட்டண வசூலை தடுக்க வேண்டும். அதோடு, மாணவர்களிடம் ரகசியமாக விசாரணை செய்து, புகார் உறுதியாக இருந்தால், அந்தக் கட்டணத்தை மாணவர்களுக்கு திருப்பித் தர வலியுறுத்தி, குற்றவாளி கல்லூரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்