தவெக நிர்வாகிகள் மீது வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தது ஐகோர்ட்
தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் தவெக நிர்வாகிகள் மீது திருச்சி ஏர்போர்ட் போலீசார் பதிவு செய்த வழக்கின் விசாரணைக்கு, உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், திருச்சியில் நாளை முதல் அரசியல் சுற்றுப் பயணத்தை தொடங்கவுள்ளார். இந்த சுற்றுப்பயணத்திற்கான காவல் அனுமதியை பெறுவதற்காக, தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் செப்.6-ம் தேதி திருச்சிக்கு வந்தார். பின்னர், திருச்சி-புதுக்கோட்டை சாலையில் உள்ள ஏர்போர்ட் விநாயகர் கோயிலில் காவல் அனுமதிக்கான கடிதத்தை வைத்து வழிபட்டார். அப்போது, ஏராளமான தவெக தொண்டர்கள் அங்கே திரண்டிருந்தனர்.
மேலும், திருச்சி-புதுக்கோட்டை சாலையில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அவர்கள் கார்களை நிறுத்தியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போலீசார் கார்களை எடுக்குமாறு கூறியும், தவெகவினர் அதை புறக்கணித்தனர். கூடவே, போலீஸாருடன் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, சட்டவிரோதமாக கூடியது, போலீஸாரை பணி செய்யவிடாமல் தடுத்தது, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியது போன்ற காரணங்களுக்காக, தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் உள்ளிட்ட பல நிர்வாகிகள் மீது ஏர்போர்ட் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இதனிடையே, புஸ்ஸி ஆனந்த் உயர் நீதிமன்றம் மதுரை அமர்வில் மனுத் தாக்கல் செய்து, வழக்கை ரத்து செய்ய கோரினார். அவர் மனுவில் கூறியதாவது: போலீசார் அரசியல் காரணத்திற்காக வழக்குப் பதிவு செய்துள்ளனர், இதனால் வழக்கை ரத்து செய்ய வேண்டும்; அதுவரை விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்.
இந்த மனு இன்று நீதிபதி சுந்தர் மோகன் முன்னிலையில் விசாரணைக்காக வந்தது. நீதிபதி, புஸ்ஸி ஆனந்த் மனு தொடர்பாக போலீசாரிடம் பதில் கேட்க உத்தரவிட்டு, வழக்கை விசாரிக்க இடைக்கால தடை விதித்து விசாரணையை தள்ளிவைத்தார்.