நேபாளத்தில் சிக்கிய 116 தமிழர்கள் மீட்பு; மற்றவர்களை அழைத்துவர நடவடிக்கை: அரசு தகவல்
நேபாளத்தில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையால் அங்கு சுற்றுலா அல்லது வேறு காரணங்களுக்காக சென்ற தமிழர்கள் வெளியேற முடியாமல் சிக்கியுள்ளனர். இவர்களை மீட்டுவர முதல்வர் ஸ்டாலின் உத்தரவின்பேரில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
அறிக்கையில் கூறியதாவது: “நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்களின் நிலை குறித்து அறிந்துகொள்வதும், அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவதும் உடனடியாக செய்யப்பட வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.
இதற்காக, நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்களின் நிலை அறியவும், தேவையான உதவிகளை வழங்கி மீட்டுவரவும் புதுடெல்லி, தமிழ்நாடு இல்லத்தில் 24×7 கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்திய வெளியுறவு துறை மற்றும் நேபாளத்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு, தமிழ்நாட்டைச் சேர்ந்த பயணிகளை மீட்டுவர அதிகாரிகள் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர்.
நேபாளத்திற்கு சென்ற தமிழர்களில் 116 பேர் பாதுகாப்பாக நேற்று (11.09.2025) இந்தியாவிற்கு திரும்பியுள்ளனர். மேலும், நேபாளத்தில் சிக்கியவர்களும் தங்கள் விவரங்களை தெரிவிக்கவும், குடும்ப உறுப்பினர்களின் நிலையை தெரிந்து கொள்ளவும், புதுடெல்லி தமிழ்நாடு இல்லத்தில் அமைந்த 24×7 கட்டுப்பாட்டு அறைக்கு கீழ்கண்ட வழிகளில் தொடர்பு கொள்ளலாம்:
- தொலைபேசி: 011-24193300
- கைபேசி/வாட்ஸ்அப்: 9289516712
- மின்னஞ்சல்: tnhouse@tn.gov.in, prcofficetnh@gmail.com