வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் இன்று, நாளையும் மழை வாய்ப்பு – வானிலை மையம்

வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக இன்றும் நாளையும் மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

வடக்கு ஆந்திரம் – தெற்கு ஒடிசா கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்திய மேற்கு மற்றும் வடமேற்கு வங்கக் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு உருவாகியுள்ளது. இது மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 2 நாட்களில் தெற்கு ஒடிசா மற்றும் அதனுடன் சேர்ந்துள்ள வடக்கு ஆந்திரக் கடலோரப் பகுதிகளை கடந்து செல்லும் வாய்ப்பு உள்ளது.

மேலும், தென்னிந்தியாவின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் தாக்கத்தால், இன்றும் நாளையும் தமிழகத்தின் சில பகுதிகளில், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதேசமயம் அதிகபட்ச வெப்பநிலை சுமார் 37.4 டிகிரி செல்சியஸ் வரை இருக்கக்கூடும்.

சென்னையில் இன்று வானம் பகுதியளவில் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

தமிழகக் கடலோரம், மன்னார் வளைகுடா, அருகிலுள்ள குமரிக் கடல், ஆந்திரக் கடலோரம், மத்திய மேற்கு – வடமேற்கு வங்கக் கடல், தென்மேற்கு வங்கக் கடல், தென்மேற்கு – மத்திய மேற்கு அரபிக் கடலின் சில பகுதிகளில் இன்று அதிகபட்சமாக மணிக்கு 65 கி.மீ வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே, மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

வடதமிழகக் கடலோர மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமாகப் பெய்தது. குறிப்பாக, நேற்று காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் கடலூர் மாவட்டம் சிதமுஷ்ணத்தில் அதிகபட்சமாக 11 செ.மீ மழை பதிவானது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Facebook Comments Box