விஜயலட்சுமி பாலியல் புகார் விவகாரம் – சீமான் மீது உச்ச நீதிமன்றம் கெடு விதிப்பு

நடிகை விஜயலட்சுமி, “திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பாலியல் ரீதியில் ஏமாற்றினார்” என்று 2011-ஆம் ஆண்டு வளசரவாக்கம் காவல் நிலையத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து போலீசார் சீமான் மீது பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி சீமான் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், கடந்த பிப்ரவரி 17-ஆம் தேதி, வழக்கை ரத்து செய்ய இயலாது எனத் தெளிவுபடுத்தியது. இதற்கு எதிராக சீமான் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

முதலில், நீதிபதி பி.வி. நாகரத்னா தலைமையிலான அமர்வு, வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடையை விதித்ததுடன், விஜயலட்சுமிக்கு இழப்பீடு வழங்குவது குறித்து இருதரப்பும் ஆலோசிக்க வேண்டும் என உத்தரவிட்டது. பின்னர், ஜூலை மாதம் விசாரணைக்கு வந்தபோது, பதிலளிக்க 4 வாரங்கள் அவகாசம் அளிக்கப்பட்டது.

சமீபத்தில், இந்த வழக்கு மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. விஜயலட்சுமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஷாதான் ஃபராஸத் ஆஜராகி, “இங்கு சமரசத்துக்கு வாய்ப்பு இல்லை. மேலும், சீமான் விஜயலட்சுமியைப் பற்றிப் பலமுறை அவதூறு பேச்சு செய்துள்ளார். அதனால் மனமுடைந்து, 2020-ஆம் ஆண்டு அவர் தற்கொலைக்குப் கூட முயன்றுள்ளார். 2007 முதல் இருவரும் பரஸ்பர சம்மதத்துடன் உறவில் இருந்தனர்” என்று வாதிட்டார்.

இதற்கு பதிலளித்த நீதிபதிகள், “இருவரும் பெரியவர்கள். என்ன நடந்தது என்பதை அவர்களுக்கே தெரியும். இனிமேல் அவர்கள் அமைதியான வாழ்க்கை நடத்த வேண்டும். விஜயலட்சுமியைப் பற்றி சீமான் மேலும் எதுவும் கூற மாட்டேன், அவதூறு கருத்துக்களை வாபஸ் பெறுகிறேன், மன்னிப்பு கோருகிறேன் எனக் குறிப்பிட்டு விளக்க மனு தாக்கல் செய்ய வேண்டும். அப்படி செய்தால் வழக்கை ரத்து செய்வதை பரிசீலிப்போம். இல்லை என்றால், மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்படும்” என்று தெரிவித்தனர்.

இதனையடுத்து, சீமான் மீது விதிக்கப்பட்ட பாலியல் வழக்கின் இடைக்காலத் தடையை செப்டம்பர் 24 வரை நீட்டித்து, சீமான் மீது உச்ச நீதிமன்றம் கெடு விதித்துள்ளது.

Facebook Comments Box