நேபாளத்தில் சிக்கிய தமிழர்களை மீட்க டெல்லியில் கட்டுப்பாட்டு அறை – தமிழக அரசு அறிவிப்பு
நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்கள் தொடர்பு கொள்ள டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்ட அரசுச் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
“நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்களின் நிலையை அறிந்து, அவர்களுக்கு உடனடி உதவி வழங்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டார்.
அதன் பேரில், டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் 24 மணிநேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டுள்ளது. இந்திய வெளியுறவுத்துறை மற்றும் நேபாளத்தில் உள்ள இந்திய தூதரகத்துடன் ஒருங்கிணைந்து, அங்கு சிக்கியுள்ள தமிழகத்தைச் சேர்ந்த பயணிகளை பாதுகாப்பாக மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
இதுவரை நேபாளத்திற்கு சுற்றுப்பயணம் சென்றிருந்த தமிழகத்தைச் சேர்ந்த 116 பேர், செப்டம்பர் 11-ஆம் தேதி பாதுகாப்பாக இந்தியா திரும்பியுள்ளனர்.
இன்னும் அங்கு சிக்கித் தவிக்கும் தமிழர்கள் தங்களது விவரங்களை வழங்கவும், அல்லது குடும்பத்தினர் தொடர்பான தகவல்களை அறியவும், கீழ்கண்ட எண்கள் மற்றும் முகவரிகளை பயன்படுத்தலாம்:
- தொலைபேசி: 011-24193300
- வாட்ஸ்ஆப்: 9289516712
- மின்னஞ்சல்: tnhouse@tn.gov.in, prcofficetnh@gmail.com
இவ்வாறு அரசுச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.