தேர்தல் நெருங்கியதால் பிரதமருக்கு மணிப்பூர் நினைவுக்கு வந்துள்ளது: கனிமொழி குற்றச்சாட்டு
மணிப்பூருக்கு பிரதமர் மோடி வருகை தந்ததைத் தொடர்ந்து, திமுக எம்.பி. கனிமொழி எக்ஸ் பதிவில் விமர்சனம் செய்துள்ளார்.
அதில் அவர்,
“2027-ல் நடைபெறவுள்ள மணிப்பூர் சட்டப்பேரவைத் தேர்தல், பிரதமருக்கு மணிப்பூரை நினைவூட்டியுள்ளது. மாநிலம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கலவரத்தில் எரிந்து கொண்டிருந்தபோதும், இப்போது தான் பிரதமர் அங்கு செல்ல முடிவு செய்துள்ளார். மனிதாபிமானம் தோல்வியடைந்த இடத்தில், 2027 தேர்தல் தேவைகள் வெற்றி பெற்றுவிட்டன” என்று தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னர், பிரதமர் மோடி தனது எக்ஸ் பதிவில்,
“நாளை (செப்டம்பர் 13) மணிப்பூர் மாநிலம் சூரசந்த்பூர் மற்றும் இம்பாலில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறேன். மணிப்பூரின் முழுமையான மற்றும் ஒருங்கிணைந்த முன்னேற்றத்திற்காக நாங்கள் உறுதியாக செயல்பட்டு வருகிறோம்.
பல்வேறு சாலைத் திட்டங்கள், தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டு பணிகள், மகளிர் விடுதிகள் உள்ளிட்ட பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட உள்ளது. மேலும், மந்திரிபுக்ரியில் அமைந்துள்ள சிவில் செயலகம், ஐடி சிறப்பு பொருளாதார மண்டலக் கட்டிடம், புதிய காவல் தலைமையகம் போன்றவை திறக்கப்பட உள்ளன” என குறிப்பிட்டிருந்தார்.