மின்வாரியத்தில் 10,000 கேங்மேன் பணியாளர்களுக்கு பதவி உயர்வு கிடைக்குமா?
மின்வாரியத்தில் 2021-ல் நியமிக்கப்பட்ட சுமார் 10,000 கேங்மேன் பணியாளர்கள், இதுவரை வயர்மேன் அல்லது எலக்ட்ரீஷியன் போன்ற களப்பணி உதவியாளர் பணியிடங்களுக்கு நியமிக்கப்படவில்லை. அதே நேரத்தில், தமிழ்நாடு பொதுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் விரைவில் தேர்வு செய்யப்பட உள்ள 1,794 பேர் களப்பணி உதவியாளர்களாக பணியில் அமர்த்தப்பட உள்ளதால், தற்போது பணியாற்றும் கேங்மேன் பணியாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
பல ஆண்டுகளாக மின்வாரியத்தில் ஆட்கள் நியமனம் செய்யப்படாததால் பராமரிப்பு பணிகளில் தாமதமும், ஊழியர்களுக்கு கூடுதல் சுமையும், மக்களுக்கு சேவை குறைபாடும் ஏற்பட்டது. இதனை சமாளிக்க, கேங்மேன் என்ற புதிய பதவி உருவாக்கப்பட்டு, அப்போது ஒப்பந்த அடிப்படையிலும் தினக்கூலியாளர்களாகவும் பணியாற்றிய 15,000 பேர் நியமிக்கப்பட்டனர். ஆனால், இவர்களில் பெரும்பாலோர் ஐடிஐ படிப்பை முடிக்காததால், எலக்ட்ரீஷியன், வயர்மேன் போன்ற உயர்ந்த பதவிகளுக்கு முன்னேற்றம் கிடைக்காமல், கேங்மேன் பதவியிலேயே ஓய்வு பெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
சங்கத்தின் கருத்து
இது குறித்து தமிழ்நாடு மின்வாரிய ஜனதா தொழிலாளர் சங்கத்தின் மாநில துணைப் பொதுச் செயலாளர் ச. சசாங்கன் தெரிவித்துள்ளார்:
“2021 பிப்ரவரியில் நியமிக்கப்பட்ட 10,000 கேங்மேன் பணியாளர்கள் தற்போது நான்கரை ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றுள்ளனர். அவர்களுக்கு 2 ஆண்டு பயிற்சிக்குப் பின் கேங்மேன் முதல்நிலை, முதுநிலை என பிரிக்கப்பட்டாலும், பதவி உயர்வு வாய்ப்பு இல்லாமல் ஓய்வு பெற வேண்டிய சூழல் நிலவுகிறது.
மின்வாரியத்தில் பணியாளர் பற்றாக்குறை கடுமையாக உள்ளது. ஓய்வுபெறும் ஊழியர்களின் இடங்களும் நிரப்பப்படவில்லை. தொழிற்சங்கங்களின் அழுத்தத்தால் TNPSC மூலம் 1,794 களப்பணி உதவியாளர்களை நியமிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. ஆனால், இது போதுமானதல்ல. தற்போது 20,000-க்கும் மேல் களப்பணி உதவியாளர் காலியிடங்கள் உள்ளன. களப் பிரிவுகள் மட்டும் 2,600-க்கும் மேல் உள்ளது. இந்நிலையில் 1,794 பேர் மட்டும் நியமிக்கப்படுவது மக்கள் சேவைக்குப் பயனளிக்காது.
ஆகவே, பொதுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் கூடுதலாக 10,000 பேரை களப்பணி உதவியாளர்களாக நியமிக்க வேண்டும். மேலும், ஏற்கனவே பணியாற்றும் கேங்மேன் பணியாளர்களுக்கு, புதிய நியமனத்திற்கு முன்பாகவே களப்பணி உதவியாளர் பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும். பல இடங்களில் இன்னும் ஒப்பந்த அடிப்படையிலான பணியாளர்களே பணியாற்றி வருகின்றனர்.
மேலும், கடந்த கால நியமனங்களில் விடுபட்டோரும், நீதிமன்ற உத்தரவைப் பெற்று காத்திருப்போரும் உள்ளனர். அவர்களுக்கு கருணை அடிப்படையில் நிரந்தர நியமனம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.