“தத்துவ ராணுவமாக ஒன்று கூடி; இலட்சியப் போராளிகளாக முன்னேறுவோம்” – திமுக உறுப்பினர்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

கொள்கையற்ற கூட்டத்தை நடத்தி, சத்தமிட்டு, சலசலப்பை ஏற்படுத்தி, பொதுமக்களுக்கு தொந்தரவு விளைவிக்கும் இயக்கமல்ல திமுக. நாம் கூடும் போது தத்துவ ராணுவமாக ஒன்றிணைவோம். கூட்டம் முடிந்தவுடன் இலட்சியப் போராளிகளாக முன்னேறுவோம்,” என திமுக முப்பெரும் விழாவை முன்னிட்டு தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கியுள்ளார்.

திமுக முப்பெரும் விழா தொடர்பாக உறுப்பினர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:

“முப்பெரும் விழா என்பது நம்மை நாமே உற்சாகப்படுத்திக் கொள்வதற்கான திருநாள். பழைய எதிரிகளோ, புதிய எதிரிகளோ எந்த சக்தியாலும் திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கொள்கைத் தளத்திலான எஃகுக் கோட்டையைத் தொட்டுப் பார்க்க முடியாது என்பதை நான் உங்களுடன் சேர்ந்து உறுதிமொழி எடுக்கும் நாள்.

நான் தலைமைப் பொறுப்பு ஏற்றுக்கொண்டதிலிருந்து சென்னைக்கு வெளியே ஒவ்வொரு ஆண்டும் மாவட்டம்தோறும் முப்பெரும் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, 2025 செப்டம்பர் 17ஆம் தேதி கரூர் புறவழிச்சாலையிலுள்ள கோடாங்கிப்பட்டி பகுதியில் கொள்கைத் திருவிழா நடைபெற இருக்கிறது.

எதைச் செய்தாலும் ‘இவ்வளவு சிறப்பாகச் செய்ய முடியுமா?’ என்று ஆச்சரியப்பட வைக்கும் வகையில், அனைவரிடமும் பாராட்டைப் பெறும் முறையில் கரூர் மாவட்டச் செயலாளர் – மேற்கு மண்டல பொறுப்பாளர் செந்தில்பாலாஜி இரவின்றி பகலின்றி உழைத்து விழா ஏற்பாடுகளை செய்து வருகிறார்.

நான் எப்போதும் விரும்புவது இடையறாத கழகப் பணியே. அதே ஆற்றலோடு உங்களும் பணியாற்ற வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். செப்டம்பர் 17ஆம் தேதி கரூரில் அலைமோதும் திரளாக நீங்கள் கூடுவீர்கள் என்பதும், உங்களைக் கண்ட நான் உற்சாகம் அடைவேன் என்பதும் உறுதி.

மேலும், செப்டம்பர் 15 அன்று பேரறிஞர் அண்ணா பிறந்த நாளில், தமிழ்நாடு இயக்கத்தில் இணைந்த 1 கோடி குடும்பத்தினரும் சேர்ந்து “தமிழ்நாட்டை ஒருபோதும் தலைகுனிய விடமாட்டோம்!” என உறுதி எடுப்போம்.

நான், நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை என்ற அநியாயத்துக்கு எதிராகப் போராடுவேன்; தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டேன் என உறுதியளிக்கிறேன்.

நான், வாக்காளர் பட்டியல் மோசடிகளுக்கு எதிராக நிற்பேன்; தமிழ்நாட்டின் வாக்குரிமையை பாதுகாப்பேன்.

நான், நீட் போன்ற திட்டங்கள் மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்காதபடி போராடுவேன்.

நான், தமிழ் மொழி, பண்பாடு மற்றும் பாரம்பரியத்துக்கு எதிரான எந்த நடவடிக்கையையும் எதிர்த்து காக்கிறேன்.

நான், பெண்கள், விவசாயிகள், மீனவர்கள், நெசவாளர்கள், தொழிலாளர்கள் ஆகியோரின் உரிமைகளை காக்கும் வகையில் போராடுவேன். தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டேன்.”

கடந்த 4 ஆண்டுகளில் திராவிட மாடல் ஆட்சியின் கீழ் தமிழ்நாடு பல துறைகளில் முன்னணி மாநிலமாக திகழ்கிறது. ஒன்றிய பாஜக அரசின் வஞ்சகத்தாலும் அதிமுகவின் துரோகத்தாலும் இழந்தவற்றை மீட்கும் முயற்சியில் நாம் முன்னேறி வந்துள்ளோம்.

பொருளாதாரம், கல்வி, மருத்துவம், தொழில், வேலைவாய்ப்பு, பெண்களின் முன்னேற்றம் என பல்வேறு துறைகளில் திராவிட மாடல் அரசு சாதனை படைத்துள்ளது. உலக நாடுகளே தமிழ்நாட்டின் வளர்ச்சியை அங்கீகரித்து வருகின்றன.

ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் பெரியாரின் உருவப்படத்தை திறந்து வைக்கும் வாய்ப்பு கிடைத்தபோது, நம் சாதனைகள் அனைத்தும் பெரியார்–அண்ணா–கருணாநிதி வழித்தடத்தில் தொடர்கின்றன என்பதை உணர்ந்தேன்.

உலகம் போற்றும் திராவிடத்தின் பெருமை தொடர, தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சி நிலைத்திட, கரூரில் நடைபெறவிருக்கும் முப்பெரும் விழா வெற்றிக்கான பாதையைத் திறக்கட்டும்.

அண்ணா கற்றுக் கொடுத்த கட்டுப்பாட்டையும், கருணாநிதி காத்த கட்டுப்பாட்டையும், இன்று எனது தலைமையிலும் அதே உறுதியுடன் நீங்கள் காப்பாற்றுவீர்கள். 2026 தேர்தலில் வெற்றியை நோக்கிச் செல்லும் முன்னோட்டமாகவே இந்த முப்பெரும் விழா அமையும்.”

Facebook Comments Box