தமிழகத்தில் செப்டம்பர் 16 முதல் நான்கு நாட்களுக்கு கனமழை வாய்ப்பு : வானிலை மையம்
செப்டம்பர் 16 முதல் நான்கு நாட்கள் தமிழகத்தின் சில மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னை வானிலை மையம் வெளியிட்ட தகவலில் கூறப்பட்டுள்ளதாவது:
வட ஆந்திரா மற்றும் தென் ஒடிசா கடற்கரைப் பகுதிகளுக்கு அருகே மேற்கு மற்றும் வடமேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த இரண்டு நாட்களில் தென் சத்தீஸ்கர் நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தென் இந்தியாவின் மீது வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காணப்படுகிறது. அதன் தாக்கத்தால் செப்டம்பர் 14 மற்றும் 15-ஆம் தேதிகளில் தமிழகத்தின் சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், செப்டம்பர் 16 முதல் 19-ஆம் தேதி வரை சில மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும்.
- 16-ஆம் தேதி – வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருவண்ணாமலை.
- 17-ஆம் தேதி – வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு.
- 18-ஆம் தேதி – கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், செங்கல்பட்டு, புதுச்சேரி.
- 19-ஆம் தேதி – காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் பகுதியளவில் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம்.
தென்தமிழக கடற்கரைப் பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில் நாளை முதல் 17-ஆம் தேதி வரை மணிக்கு 40–50 கிமீ வேகத்திலும், சில நேரங்களில் 60 கிமீ வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் கடல் பிரவேசிக்க வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் (இன்று காலை 8.30 மணி வரை) பதிவான மழை அளவுகள்:
- புதுச்சேரி – 8 செ.மீ.
- விழுப்புரம் – 7 செ.மீ.
- வளவனூர் – 6 செ.மீ.
- பத்துக்கண் (புதுச்சேரி) – 5 செ.மீ.
- செய்யார் (திருவண்ணாமலை), முண்டியம்பாக்கம் (விழுப்புரம்), திருக்கனூர் (புதுச்சேரி), கடலூர், மாமல்லபுரம் (செங்கல்பட்டு) – தலா 4 செ.மீ.
இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.