விளையாட்டு வீரர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் – பழனிசாமி உறுதி

திறமை மிக்க விளையாட்டு வீரர்களுக்கு அதிமுக அனைத்து விதமான ஆதரவுகளையும் வழங்கும் என்று கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கோவையில் இன்று (செப்.13) நடைபெற்ற நிகழ்ச்சியில், கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களைச் சேர்ந்த கிரிக்கெட் அணி வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டன. கொடிசியா அருகே உள்ள தனியார் ஹோட்டல் வளாகத்தில் நடந்த இந்நிகழ்ச்சிக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமையேற்றார்.

இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பழனிசாமி, முதற்கட்டமாக 30-க்கும் மேற்பட்ட கிரிக்கெட் அணிகளுக்கு உபகரணங்களை வழங்கினார். பின்னர் உரையாற்றிய அவர் கூறியதாவது:

“விளையாட்டு என்பது உடல்நலம், மனநலம் மற்றும் ஒழுக்கத்தை வளர்க்கும் முக்கிய துறையாகும். விளையாட்டு வீரர்கள் சவால்களை தாங்கும் மனநிலையுடன் இருப்பவர்கள். எங்கள் ஆட்சியில் வீரர்களுக்கு தேவையான வசதிகள் வழங்கப்பட்டன.

அதிமுக ஆட்சியில் அரசு வேலைவாய்ப்புகளில் விளையாட்டு வீரர்களுக்காக 3% இட ஒதுக்கீடு ஏற்படுத்தப்பட்டது. மேலும், முதல்வர் கோப்பை போட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. சர்வதேச அளவுக்கு தயாராக வீரர்கள் பயிற்சி பெற விளையாட்டு விடுதிகள் அமைக்கப்பட்டன. ஊட்டச்சத்து உதவித் தொகை 3 மடங்கு உயர்த்தப்பட்டது. சர்வதேச போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு கூடுதல் ஊக்கத் தொகையும் வழங்கப்பட்டது.

கிராமம் முதல் நகரம் வரை வீரர்களுக்குத் தேவையான உபகரணங்கள் எங்கு வேண்டுமோ அங்கு வழங்கப்படும். அதிமுகவின் விளையாட்டு அணியில் இளைஞர்கள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்த வேண்டும். திறமையான வீரர்களுக்கு எங்களால் இயன்ற எல்லா உதவிகளும் செய்யப்படும்.” என்றார்.

இந்த நிகழ்ச்சியில் எம்.எல்.ஏக்கள் கே.அர்ச்சுணன், செ.தாமேதரன், பி.ஆர்.ஜி. அருண்குமார், கே.ஆர். ஜெயராம், வி.பி. கந்தசாமி, ஏ.கே. செல்வராஜ், கே.ராதாகிருஷ்ணன், முன்னாள் அமைச்சர்கள் செ.ம. வேலுசாமி, கே.பி. ராமலிங்கம் உள்ளிட்ட பலர், பொதுமக்கள், வீரர்கள் கலந்து கொண்டனர்.

Facebook Comments Box