வைகை ஆற்றில் மனுக்கள் மிதந்த விவகாரம்: நில அளவை துறை உதவி வரைவாளர் கைது
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வைகை ஆற்றில் ஆக. 29-ம் தேதி காலை நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் மனுக்கள் மிதந்தது சம்பந்தமாக சிவகங்கை கோட்டாட்சியர் விஜயகுமார் விசாரணை நடத்தினார். இதன் அடிப்படையில், திருப்புவனம் வட்டாட்சியர் விஜயகுமார் இடமாற்றம் செய்யப்பட்டார். மேலும், அலட்சியமாக செயல்பட்ட 7 அலுவலர்களுக்கு ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
முன்னதாக, திருப்புவனம் வட்டாட்சியர் அலுவலக நில அளவைப் பிரிவில் பராமரிக்கப்பட்ட 13 பட்டா மாறுதல் மனுக்கள் மர்ம நபர்கள் திருடிச் சென்றதாக வட்டாட்சியர் விஜயகுமார் புகார் அளித்திருந்தார். இதனையடுத்து, திருப்புவனம் போலீஸ் வழக்கு பதிவு செய்தது. அலுவலகத்தில் சிசிடிவி கேமராக்கள் இல்லாததால், மனுக்கள் திருடிய நபரை கண்டுபிடிப்பதில் தாமதம் ஏற்பட்டது.
இதற்கிடையில், திருப்புவனம் வட்டாட்சியர் அலுவலக நில அளவைப் பிரிவில் பணியாற்றும் முதுநிலை வரைவாளர் சரவணனை 17 ‘பி’ உத்தரவின் கீழ் நடவடிக்கை எடுக்கவும், அவுட்சோர்சிங்கில் பணிபுரியும் புல உதவியாளர் அழகுப்பாண்டியை பணிநீக்கம் செய்யவும், நில அளவைத் துறை உதவி இயக்குநருக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.
இதற்கு தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் மற்றும் நில அளவை அலுவலர்கள் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். கடந்த இரவு, திருப்புவனம் வட்டாட்சியர் அலுவலக நில அளவைப் பிரிவில் பணிபுரியும் உதவி வரைவாளர் முத்துக்குமரன் (42) போலீசார் கைது செய்து விசாரணை செய்தனர். சங்கத்தினர், முறையான ஆதாரம் இல்லாமல் கைது செய்யக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். எனினும், வைகை ஆற்றுப் பாலத்தில் முத்துக்குமரன் சென்று வந்தது சிசிடிவி காட்சிகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று போலீசார் தெரிவித்தனர்.
சங்கத்தினர், மனுக்கள் கொண்டு வந்ததற்கோ அல்லது ஆற்றில் வீசியதற்கோ ஆதாரம் இருந்தால் மட்டுமே கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பிரான்சிஸ், டிஎஸ்பி பார்த்திபன், ஆய்வாளர் முத்துக்குமார் ஆகியோர் முழு நாள் விசாரணை நடத்தினர். பின்னர், வைகை ஆற்றுப் பாலத்துக்குச் சென்றது தொடர்பான காரணம் சரியான முறையில் விளக்கப்படவில்லை என்பதால், முத்துக்குமரனை நேற்று இரவு கைது செய்தனர்.