அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்களை ஸ்டிக்கர் ஒட்டி திறப்பதே திமுக அரசின் சாதனை: இபிஎஸ் விமர்சனம்
அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்களை ஸ்டிக்கர் ஒட்டி திறப்பதே திமுக அரசின் சாதனை என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தெரிவித்தார்.
கோவை சிங்காநல்லூர் சட்டப்பேரவைத் தொகுதியில் நேற்று பொதுமக்களிடம் அவர் கூறியது: “அதிமுக ஆட்சியில் கோவையில் தொழில் வளர்ச்சி சிறப்பாக இருந்தது. தொழிலாளர்கள் 3 ஷிப்ட்களில் பணியாற்றினர், தற்போது ஒரு ஷிப்ட்டில் மட்டும்தான் வேலை செய்கிறார்கள். அதிமுக ஆட்சியில் விமான நிலைய விரிவாக்க பணிகள் முடிவடைந்துவிடும் நிலையில் இருந்தது; திமுக ஆட்சியில் அந்தத் திட்டம் முடங்கிவிட்டது. அதிமுக ஆட்சிக்கு வந்த பின்னர் விமான நிலைய விரிவாக்கப்பணி முடிக்கப்படும்.”
கோவையில் மெட்ரோ ரயில் திட்ட அறிக்கை தயாரிப்பு பணியும் அதிமுக ஆட்சியில் தொடங்கிய நிலையில், திமுக ஆட்சியில் அந்தத் திட்டத்தை நிறுத்தியுள்ளனர். திமுக ஆட்சியில் புதிய திட்டம் ஒன்றும் தொடங்கவில்லை. அதிமுக ஆட்சியில் தொடங்கிய திட்டங்களை ஸ்டிக்கர் ஒட்டி திறப்பதே திமுக அரசின் சாதனை.
தமிழகத்தில் தற்போது சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்பட்டு உள்ளது. சொத்துவரி, மின் கட்டண உயர்வால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். கோவை தொழிற்சாலைகள் மற்ற மாநிலங்களுக்கு மாற்றப்பட்டுவிட்டன. கட்டுமானப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. அரசு மருத்துவமனைகளில் மக்களுக்கு தேவையான சிகிச்சை வழங்கப்படவில்லை.
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, எம்எல்ஏக்கள் அம்மன் அர்ச்சுணன், கே.ஆர்.ஜெயராம் உள்ளிட்டோர் நிகழ்வில் உடனிருந்தனர்.