தேசிய லோக்-அதாலத்தில் ரூ.719 கோடி இழப்பீடு – ஒரே நாளில் 90,892 நிலுவை வழக்குகள் தீர்வு

தமிழகம் முழுவதும் நேற்று நடைபெற்ற தேசிய லோக்-அதாலத்தில், ஒரே நாளில் 90,892 நிலுவை வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு மொத்தம் ரூ.718.74 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது.

மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் சார்பில் நடைபெற்ற இந்த லோக்-அதாலத், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியும் மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவருமான எம்.எம்.வஸ்தவாவின் அறிவுறுத்தலின்படி, மூத்த நீதிபதியும் செயல் தலைவருமான எம்.சுந்தர் மேற்பார்வையில் நடந்தது. சென்னை உயர்நீதிமன்றத்தில் 6 அமர்வுகளும், மதுரை கிளையில் 3 அமர்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டன.

சென்னை உயர்நீதிமன்ற அமர்வுகளில் நீதிபதிகள் பி.பி.பாலாஜி, கே.ராஜசேகர், என்.செந்தில்குமார், ஜி.அருள்முருகன், எம்.ஜோதிராமன் மற்றும் ஓய்வுபெற்ற நீதிபதி பி.கோகுல்தாஸ் தலைமையேற்றனர். மதுரை கிளையில் நீதிபதி ஆர்.பூர்ணிமா மற்றும் ஓய்வுபெற்ற நீதிபதிகள் ஜி.சொக்கலிங்கம், எஸ்.ஆனந்தி வழக்குகளை விசாரித்தனர்.

மொத்தம் 501 அமர்வுகள் மாவட்ட மற்றும் தாலுகா நீதிமன்றங்களில் நடத்தப்பட்டு 90,892 நிலுவை வழக்குகள் தீர்க்கப்பட்டன. இதன்மூலம் ரூ.718.74 கோடி இழப்பீடு வழங்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

கோவை, திருப்பூர் மாவட்டங்களில் நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ்சந்திரா; விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்டங்களில் நீதிபதி எம்.தண்டபாணி; திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் நீதிபதி ஜி.கே.இளந்திரையன் சிறப்பு பார்வையாளர்களாக மேற்பார்வையிட்டனர்.

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிறு வழக்குகள் நீதிமன்றத்தில் நடந்த தேசிய லோக்-அதாலத்தில் மட்டும் 1,026 வழக்குகள் தீர்க்கப்பட்டு, ரூ.53.01 கோடி இழப்பீடு வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி எஸ்.கார்த்திகேயன், சிறு வழக்குகள் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.நசீர்அகமது, தொழிலாளர் நீதிமன்ற முதன்மை நீதிபதி டி.லிங்கேஸ்வரன், மாவட்ட சட்ட உதவி ஆலோசனை மைய செயலாளர் எஸ்.பி.கவிதா, நீதிமன்ற பதிவாளர் பி.திவ்யாதயானந்த், வழக்கறிஞர் ஆர்.ராஜேஷ்குமார் மவுரியா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மாநிலம் முழுவதும் நடந்த லோக்-அதாலத் ஏற்பாடுகளை மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உறுப்பினர் செயலரும் மாவட்ட நீதிபதியுமான எஸ்.பாலகிருஷ்ணன் தலைமையில் மாவட்ட நீதிபதிகள் மேற்கொண்டனர்.

Facebook Comments Box