வன்னியர் இடஒதுக்கீட்டிற்காக எத்தகைய போராட்டத்துக்கும் தயாராக உள்ளோம் – பாமக தலைவர் அன்புமணி உறுதி

வன்னியர்களுக்கு உரிய இடஒதுக்கீடு கிடைக்க சிறை நிரப்புதல் உட்பட எந்த வகையான அறப்போராட்டங்களும், தியாகங்களும் செய்யத் தயாராக இருக்கிறோம் என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தொண்டர்களுக்கு அவர் நேற்று எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். மேலும், அனைத்து சமூகங்களுக்கும் அவர்களது மக்கள்தொகை அடிப்படையில் இடஒதுக்கீடு கிடைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தும் நோக்கத்துடன், 1980ஆம் ஆண்டு வன்னியர் சங்கத்தை டாக்டர் ராமதாஸ் தொடங்கினார்.

7 ஆண்டுகள் தொடர்ந்து நடந்த போராட்டங்களுக்கும் பலன் இல்லாத நிலையில், 1987 செப்டம்பர் 17ஆம் தேதி, பெரியாரின் பிறந்த நாளில், சாலை மறியல் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. அந்த வாரம் முழுவதும் நடந்த போராட்டங்களில் காவல்துறை தடியடி மற்றும் துப்பாக்கிச் சூடு காரணமாக 21 உயிர்கள் பலியானது.

அந்த தியாகிகளை நினைவுகூரும் விதமாக, சமூகநீதி நாளான செப்டம்பர் 17 அன்று, அவர்களின் புகைப்படங்கள் மற்றும் நினைவுத் தூண்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும். மேலும், ஒவ்வொருவரும் தங்கள் வீடுகளின் முன்பாக ‘வன்னியர் இடஒதுக்கீட்டு போராட்ட தியாகிகளுக்கு வீரவணக்கம்’ என்ற பதாகையை அமைத்து வணங்க வேண்டும்.

எமது சமூக உரிமைகள் எளிதாக கிடைத்ததில்லை; கடும் போராட்டங்களும் தியாகங்களும் மூலமே பெற்றுள்ளோம். தற்போது வன்னியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள 10.5 சதவீத இடஒதுக்கீடு என்பது ஒரு அநீதி. உண்மையான சமூகநீதி 15 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும்போதே அமையும். அதை எட்டிசெய்ய, சிறை நிரப்புதல் உட்பட எந்த வகையான அறப்போராட்டங்களுக்கும், தியாகங்களுக்கும் தயாராக உள்ளோம். அதுவே எங்கள் குறிக்கோள்.

இவ்வாறு அன்புமணி உறுதியளித்துள்ளார்.

Facebook Comments Box