விஜய்யின் திருச்சி பிரசாரம் ‘சம்பவங்கள்’ – விதிகளை புறக்கணித்த தவெக தொண்டர்கள்!

நேற்று பிரசாரம் செய்ய தவெக தலைவர் விஜய் வந்தபோது, காவல்துறை விதித்த நிபந்தனைகளை அவரது ரசிகர்கள், தொண்டர்கள் முற்றிலும் மீறினர். இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு ஆளானார்கள்.

திருச்சி மரக்கடை பகுதியில் விஜய் நேற்று பிரசாரம் மேற்கொண்டார். அந்த நேரத்தில், அவரின் வாகனத்துக்கு பின்னால் ஐந்து வாகனங்களுக்கு மேல் அனுமதி இல்லை. அவரின் வாகனத்தின் முன்பும், பின்னும் தொண்டர்கள் பைக், கார் ஊர்வலமாக வரக்கூடாது.

மேலும், உயரமான கட்டிடங்கள், மரங்களில் ஏறி நிற்கக்கூடாது. மேளதாளங்கள் வாசிக்க தடை. அனுமதியின்றி பிளக்ஸ், பேனர்கள் வைக்கக் கூடாது. கர்ப்பிணிகள், முதியவர்கள், சிறுவர்கள், மாற்றுத்திறனாளிகள் வருவதை தவிர்க்க வேண்டும் என மொத்தம் 23 நிபந்தனைகள் காவல்துறை விதித்திருந்தது.

ஆனால், விஜய் சென்னையிலிருந்து தனியார் விமானம் மூலம் திருச்சி வந்தவுடன், அங்கு கூடியிருந்த தொண்டர்கள் ஆர்வத்தில் பாதுகாப்பு தடுப்புகளை உடைத்துக் கொண்டு ஓடியனர். போலீசார் மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் அவர்களை தடுக்க போராடினர்.

விஜயின் வாகனம் புறப்பட்டதும், அதன் முன், பின் ஏராளமான வாகனங்கள் பின்தொடர்ந்தன. ஆயிரக்கணக்கானோர் அவரது வாகனத்தைச் சூழ்ந்ததால், 8 கி.மீ. தொலைவில் உள்ள மரக்கடை பிரசார இடத்தை அடைய 5 மணி நேரம் ஆனது. கூட்டத்தில் பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள் பெருமளவில் இருந்தனர்.

மரக்கடை பகுதியில் கட்டிடங்கள், சுவர்கள், மரங்கள் மீது பலர் ஆபத்தாக ஏறி நின்றனர். பல இடங்களில் அனுமதியின்றி பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் வைக்கப்பட்டிருந்த ஒரு பேனர் திடீரென சாய்ந்தது; யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

மைக் பிழை – டீம் குழுவின் தவறு:

விஜயின் பிரசார பயணத்தை ‘டீம்’ அமைப்பினர் கவனித்தனர். புகைப்படம், வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களுக்கு அனுப்பினர். ஆனால், விஜய் பேசத் தொடங்கியவுடன் மைக் வேலை செய்யவில்லை. இதனால் சில நிமிடங்கள் மட்டுமே பேசினார். இதனால் தொண்டர்கள் அதிருப்தியடைந்தனர்.

கூட்ட நெரிசலில் மயக்கம்:

விஜயின் வாகனம் கூட்டத்தில் சிக்கி மெதுவாக நகர்ந்தது. அந்த நெரிசலில் ஹரிணி என்ற பெண் மயங்கினார். அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அதிக வெயில், தண்ணீர் வசதி இல்லாததால் 15 பேர் மயங்கினர். 5 பெண்களுக்கு வலிப்பு ஏற்பட்டது. மேலும், பள்ளி கூரையில் ஏறி நின்ற 2 இளைஞர்கள் கீழே விழுந்து காயமடைந்தனர்.

காலணிகள் சிதறியது:

விமான நிலையத்திலிருந்து மரக்கடை வரை 1,000-க்கும் மேற்பட்ட காலணிகள் கூட்ட நெரிசலில் சிதறிக் கிடந்தன. விஜய் சென்ற இடங்கள் எல்லாம் கலவரம் முடிந்த பகுதி போல் தோன்றின.

வழக்கு சாத்தியம்:

விஜய்க்கு காலை 10.30 மணி முதல் 11 மணி வரை பேச அனுமதி இருந்தது. ஆனால், அவர் பிற்பகல் 3 மணியளவில் பேசியதால், அனுமதி மீறியதாக வழக்கு பதிவு செய்யப்பட வாய்ப்புள்ளது எனக் கூறப்படுகிறது.

Facebook Comments Box