இந்தியாவை அமெரிக்கா சிறுமைப்படுத்தக்கூடாது: வெங்கய்ய நாயுடு வலியுறுத்தல்
மயிலாப்பூர் அகாடமியின் பவள விழாவில் முன்னாள் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு உரையாற்றினார். அப்போது அவர், “இந்தியாவை அமெரிக்கா எப்போதும் குறைத்து மதிப்பிடக் கூடாது” என்று தெரிவித்தார்.
‘தி மயிலாப்பூர் அகாடமி’ பவள விழா, மயிலாப்பூர் பாரதிய வித்யா பவன் அரங்கில் நேற்று நடைபெற்றது. இதில் வெங்கய்ய நாயுடு தலைமை விருந்தினராக கலந்துகொண்டு விழா மலரை வெளியிட்டார். அதன் முதல் பிரதியை முன்னாள் இந்திய நிரந்தர தூதர் டி.எஸ்.திருமூர்த்தி பெற்றுக்கொண்டார்.
பல்வேறு துறைகளில் (கலை, கல்வி, மருத்துவம், அரசு சேவை) சிறந்து விளங்கியவர்களுக்கு வெங்கய்ய நாயுடு விருதுகளை வழங்கினார். பரதநாட்டிய கலைஞர்கள் தனஞ்செயன் – சாந்தா தனஞ்செயன், ‘ரீச்’ பவுண்டேஷன் அறங்காவலர் டாக்டர் நளினி கிருஷ்ணன் ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
உரையாற்றிய அவர் கூறியதாவது:
- தாய், தாய் மொழி, தாய் நாடு – இந்த மூன்றையும் ஒருபோதும் மறந்துவிடக்கூடாது.
- எத்தனை மொழிகள் கற்றாலும், தாய் மொழியை மதிக்க வேண்டும்.
- எந்த மொழியையும் யாரும் பிறர்மேல் திணிக்க முடியாது.
- தமிழ்ச் சமூகம் பாரம்பரியம், பெரியவர்களுக்கு மரியாதை கொடுக்கும் பண்பு ஆகியவற்றால் உயர்ந்த ஒன்று.
- நமது பண்பாடு, பாரம்பரியம், நல்ல மரபுகளை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும்.
மேலும் அவர், “மேற்கத்திய சமூகத்தில் வன்முறை அதிகம்; அதன் தரம் தொடர்ந்து குறைந்து வருகிறது. இந்திய பொருளாதாரம் இறந்த பொருளாதாரம் என்று இதுவரை எந்த அதிபரும் சொல்லவில்லை. ஆனால் தற்போதைய அமெரிக்க அதிபர் அவ்வாறு கூறியுள்ளார். அமெரிக்கா மிகப்பெரிய ஜனநாயக நாடு, அதை நாங்கள் மதிக்கிறோம். இருந்தாலும் இந்தியாவை அவர்கள் சிறுமைப்படுத்தக் கூடாது. இன்று அமெரிக்காவில் உயர்ந்த பதவிகளில் பல இந்தியர்கள், குறிப்பாக தென்னிந்தியர்கள் உள்ளனர். காரணம் – அவர்களின் திறமை. இந்திய இளைஞர்கள் மிகவும் திறமையானவர்கள். நமது வளர்ச்சி விகிதத்தைப் பார்க்கும்போது, இந்தியா விரைவில் உலக பொருளாதாரத்தில் 3-வது இடத்தைத் தாண்டி, 2-வது இடத்துக்கே செல்லும் வாய்ப்பு உள்ளது” என்றார்.
பின்னர் டி.எஸ்.திருமூர்த்தி உரையாற்றும்போது, “என் குடும்பத்துக்கும் மயிலாப்பூர் அகாடமிக்கும் நீண்ட நாள் தொடர்பு உள்ளது. என் தாத்தா திருமூர்த்தி இதன் முதல் தலைவராக இருந்தவர். பள்ளி நாட்களில் நான் ஓவியத்துக்கான பரிசை இந்த அகாடமியிலிருந்து பெற்றிருக்கிறேன். 75 ஆண்டுகளாக இந்நிறுவனம் சமூகத்துக்கு பெரிய சேவைகளை செய்து வருகிறது. ஓட்டுநர், நடத்துநர், தீயணைப்பாளர் போன்ற அடிப்படை தொழிலாளர்களையும் கௌரவிக்கும் தனிச்சிறப்பு இந்த அமைப்புக்கே உண்டு” என்று பாராட்டினார்.
முன்னதாக, அகாடமி தலைவர் நீதிபதி எஸ்.ஜெகதீசன் வரவேற்புரை ஆற்றினார். நிறைவில் துணைத் தலைவர் நல்லி குப்புசாமி நன்றி கூறினார். நிகழ்ச்சியை செயலாளர் கே.ஜெ.சூரியநாராயணன் தொகுத்து வழங்கினார்.