‘அன்புக் கரங்கள்’ திட்டத்தை நாளை தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்
பெற்றோரை இழந்த குழந்தைகள் இடையறாது கல்வி பயில அரசு சார்பில் மாதம் ரூ.2,000 உதவித்தொகை வழங்கும் “அன்புக் கரங்கள்” திட்டத்தை, முதல்வர் மு.க. ஸ்டாலின் நாளை (15.09.2025) சென்னை கலைவாணர் அரங்கத்தில் தொடங்கி வைக்க உள்ளார்.
தமிழக அரசின் அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
“ஏற்றமிகு தமிழ்நாட்டை உருவாக்கும் நோக்கில், குழந்தைகளின் கல்வி மற்றும் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. அதன்படி, மிகுந்த வறுமையில் உள்ள குடும்பங்களை அடையாளம் கண்டு, பெற்றோரை இழந்தோரை பாதுகாக்கும் நோக்கில், ‘தாயுமானவர்’ திட்டத்தின் ஒரு பகுதியாக, ‘அன்புக் கரங்கள்’ திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் மூலம், பெற்றோரை இழந்தோரும், ஒருவரை இழந்து மற்றொருவரால் பராமரிக்க முடியாத நிலையிலுள்ள குழந்தைகளும் 18 வயது வரை இடைநிற்றல் இன்றி கல்வி தொடர, மாதம் ரூ.2,000 உதவித்தொகை பெறுவார்கள். மேலும், பள்ளி கல்விக்குப் பின் கல்லூரி படிப்பு மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சிகளும் வழங்கப்படும்.
அதிகமாக, பெற்றோரை இழந்து, 12ஆம் வகுப்பு முடித்து பல்வேறு உயர்கல்வி நிறுவனங்களில் சேர்க்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு மடிக்கணினிகளும் அன்றைய தினம் முதல்வர் வழங்கவுள்ளார்” என்று அரசு தெரிவித்துள்ளது.