”நயன்தாரா வந்தால் இதைவிட இரட்டிப்பு மக்கள் கூடுவார்கள்” – விஜய்யை குறிவைத்து பேசிய சீமான்
ரஜினி, அஜித் வந்திருந்தால் இதைவிட அதிகமான திரளும். நயன்தாரா வந்தால் இதைவிட இரண்டு மடங்கு மக்கள் திரள்வார்கள். கூட்டத்தை எண்ண வேண்டாம்; கொள்கையை மதிக்க வேண்டும் என விஜய்க்கு திரண்டிருந்த மக்களைப்பற்றி நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “விஜய் தேர்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ளார், அதனால் பொதுமக்கள் அதிக அளவில் திரண்டுள்ளனர். வெள்ளித்திரையில் பார்த்த நடிகர் நேரில் வருகிறார் என்பதால் மக்கள் கூடுகிறார்கள். நாங்கள் சிறுவர்களாக இருந்த காலத்தில் எம்ஜிஆர், சிவாஜி வருவார்கள் என்று மணிநேரங்களுக்கு காத்திருக்கிறோம். நடிகர் வந்தால் கூட்டம் கூடுவது இயல்பானது.
அஜித் வந்திருந்தால் இதைவிடவும் கூட்டம் இருந்திருக்கும், ரஜினி வந்திருந்தால் இதைவிட பெரும் திரள் இருக்கும். நயன்தாரா வந்தால் இதைவிட இரட்டிப்பு மக்கள் வருவார்கள். கூட்டத்தைப் பார்த்து மதிப்பிட வேண்டாம்; கொள்கையைப் பார்த்து மதிக்க வேண்டும், இல்லையெனில் பயன் இல்லை.
மக்களுக்காக உழைக்கும் ஒரே கட்சி நாம் தமிழர் கட்சிதான். எந்த பிரச்சினை ஏற்பட்டாலும் நேரில் நானே நிற்பேன். அடுத்ததாக மலைகள் மாநாடு தருமபுரியில் நடைபெறும்” என்றார்.
தவெக தலைவர் மற்றும் நடிகர் விஜய், நேற்று திருச்சியில் தனது தேர்தல் சுற்றுப்பயணத்தை தொடங்கினார். இதனால் பெரும் கூட்டம் திரண்டது, இது அரசியல் வட்டாரங்களில் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.