“திமுகவின் 505 தேர்தல் வாக்குறுதிகளில் 364 தற்போது செயல்பாட்டில் உள்ளது” – முதல்வர் மு.க. ஸ்டாலின்

மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவது எங்களின் கடமை, பொறுப்பு என்பதையும் உணர்கிறோம் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரியில் நடைபெற்ற அரசு விழாவில், நிறைவேற்றப்பட்ட பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய அவர், பல துறைகளில் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்:

அதிமுக ஆட்சியில் 10 ஆண்டுகளில் செய்யப்பட்ட நெல் கொள்முதலை விட, எங்கள் திராவிட மாடல் அரசில் கடந்த நான்கரை ஆண்டுகளில் 6 லட்சம் மெட்ரிக் டன் அதிகமாக நெல் கொள்முதல் செய்து, தரமான அரிசியை வழங்கியுள்ளோம். 7.33 லட்சம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட, மேற்கூரையுடன் கூடிய சேமிப்புத் தளங்களை அமைத்து, நெல் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதற்கு அமைச்சர் சக்கரபாணி காரணம் என பாராட்டினார்.

கிருஷ்ணகிரி வளர்ச்சிக்கான அடித்தளங்கள் திமுக ஆட்சியிலேயே போடப்பட்டதாகவும், சிப்காட் வளாகம் முதல் மின்நிலையங்கள், ஐடி பூங்கா, மின்னணு தொழில் வளாகம் என பல முக்கிய திட்டங்களை பட்டியலிட்டார்.

மகளிர் சுய உதவிக்குழு, மக்களைத் தேடி மருத்துவம் போன்ற திட்டங்களும் இந்த மாவட்டத்தில் துவங்கியதாக குறிப்பிட்டார்.

இந்த விழாவில் 1,212 கோடி ரூபாய் மதிப்பில், 85,711 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டதாகவும், நகர்ப்புற மக்களுக்கும் இவ்வசதி கிடைத்திருப்பது வரலாற்றுச் சாதனை என்றும் தெரிவித்தார்.

மேலும், கிருஷ்ணகிரிக்கான முக்கிய அறிவிப்புகளையும் வெளியிட்டார்:

  • ஓசூர் அரசு மருத்துவமனைக்கு 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
  • ஆலியாளம் அணை மற்றும் எண்ணேகொள் அணைக்கட்டில் நீர்த் திட்டங்கள்.
  • பாரூர் ஏரி பிரதான கால்வாய் மூலம் 33 ஏரிகள் நிரப்பும் திட்டத்திற்கு 75 கோடி ரூபாய்.
  • 4 புதிய துணை மின் நிலையங்கள்.
  • ஆயிரக்கணக்கான விவசாயிகளுக்கு மரக்கன்றுகள்.
  • ஒசூர் மாநகரில் ஆயிரக்கணக்கான கோடிகளில் பல்வேறு திட்டங்கள்.

மேலும், கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம், காலை உணவுத் திட்டம், நான் முதல்வன், புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களால், இந்த மாவட்டத்தில் மட்டும் 6.68 லட்சம் மக்கள் பயனடைந்துள்ளனர் என தெரிவித்தார்.

அத்துடன், புதிய ஐந்து அறிவிப்புகளையும் வெளியிட்டார்:

  • அஞ்செட்டியை தலைமையிடமாகக் கொண்டு புதிய ஊராட்சி ஒன்றியம்.
  • கெலமங்கலம் பகுதியில் 12.43 கோடி ரூபாயில் சாலை அமைப்பு.
  • கெலமங்கலம் புறவழிச்சாலை சாத்தியக்கூறு அறிக்கை.
  • NH-44, NH-844 இணைக்கும் புதிய சாலை சாத்தியக்கூறு அறிக்கை.
  • ஒசூர் LC-104 ரயில்வே கேட் பகுதியில் மேம்பாலம்.

எதிர்க்கட்சிகள் எதையும் செய்யாமல், “திமுக வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை” என்று கூறுவதைப் பற்றி, “505 வாக்குறுதிகளில் 364 நிறைவேற்றப்பட்டு செயல்பாட்டில் உள்ளன, 40 அரசு பரிசீலனையில் உள்ளது, 37 ஒன்றிய அரசின் பரிசீலனையில், 64 நிதி காரணமாக நிறைவேற்றப்படாத நிலையில் உள்ளது” என முதல்வர் விளக்கம் அளித்தார்.

NEET விலக்கு குறித்து, “முயற்சி தொடர்கிறது, சட்டமன்றத்தில் சட்டம் இயற்றியோம், ஆனால் ஆளுநர் மூலம் தடுக்கப்பட்டது. அடுத்த தேர்தலில் மாற்றம் வரும்” என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

முதலீடுகள் குறித்து, “அதிமுக ஆட்சியில் முதலீட்டாளர்கள் ஓடி சென்றார்கள், ஆனால் எங்கள் ஆட்சியில் 77% ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன” என்றும், “தமிழ்நாட்டை தெற்காசியாவின் முன்னேறிய மாநிலமாக மாற்றுவேன்” என்றும் உறுதி தெரிவித்தார்.

இவ்வாறு, “பொய்கள், அவதூறுகள் எதுவும் எனக்கு புதியதல்ல; 50 வருடங்களாக அதை எதிர்கொண்டு இன்று மக்களிடம் நிற்கிறேன்” எனக் கூறி உரையை முடித்தார்.

Facebook Comments Box