கூட்டணி ஆட்சி எனும் விஜய்யின் கருத்தை புதிய தமிழகம் கட்சி ஆதரிக்கிறது – கிருஷ்ணசாமி
புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியதாவது:
“தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தேவை என்பதைக் கூறிய விஜய்யின் கருத்தை எங்கள் கட்சி வரவேற்கிறது.”
இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன் கோயில் நிர்வாகத்தில் இடம்பெற்றுள்ள முறைகேடுகளை எதிர்த்து வரும் செப்டம்பர் 24 ஆம் தேதி விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய தமிழகம் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கான ஆலோசனைக் கூட்டம் சாத்தூர் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தலைமையில் நடைபெற்றது.
அப்போது அவர் கூறியதாவது:
“ரூ.130 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் இருக்கன்குடி மாரியம்மன் கோயில் மேம்பாட்டு பணிகளில் பெரிய அளவில் ஊழல் நடந்துவருகிறது. ஒரே சாதியை சேர்ந்தவர்களை மட்டுமே அறங்காவலர்களாக நியமிப்பதை நிறுத்தி, அனைத்து சாதியினருக்கும் இடம் வழங்க வேண்டும். இதை உள்ளடக்கிய பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியே வரும் 24ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்கள் உள்ளன. அடுத்த ஆண்டு ஜனவரி 7ஆம் தேதி மதுரையில் நடைபெறும் 7வது மாநில மாநாட்டில் கூட்டணி குறித்து தெளிவான அறிவிப்பு வழங்கப்படும். அதுவரை மாநாட்டுக்கான ஆயத்தப் பணிகளை கிராமம்தோறும் மேற்கொண்டு வருகிறோம்.
தமிழகத்தில் திமுக, அதிமுக ஆட்சிக்கு வரும் முன் இனிப்பான வாக்குறுதிகளை வழங்குகின்றன. ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு அவை மக்களுக்கு கசப்பாக மாறுகின்றன. அதனால் ஒரே கட்சி ஆட்சி முறை, சர்வாதிகார ஆட்சி முறை, ஊழல் ஆட்சி முறை அனைத்தும் முடிவுக்கு வர வேண்டுமெனில், கூட்டணி ஆட்சி மட்டுமே மாற்றாகும். 2026 சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி ஆட்சி அமைய வேண்டும் என்பதே புதிய தமிழகம் கட்சியின் நிலைப்பாடு. அதற்காக எந்தக் கட்சி முழுமையாக இணங்குகிறதோ அந்தக் கட்சியுடன் கூட்டணி அமைத்து செயல்படுவோம்.
தவெக தலைவர் விஜய் இப்போது தான் பிரசாரம் தொடங்கியிருக்கிறார். அவர் எவ்வாறு செயல்படுகிறார் என்பதை கவனித்து பிறகு முடிவு எடுக்கப்படும். ஆனாலும், கூட்டணி ஆட்சி என்ற விஜய்யின் கருத்தை எங்கள் கட்சி பாராட்டுகிறது. அது தமிழ்நாட்டிற்கு தேவையான ஒன்று.
மேலும், புதிதாக உருவாகும் கட்சிகளை கட்டுப்பாடுகள் போட்டு தடுக்க முயற்சிக்கக்கூடாது. அடக்க முயன்றால் அவர்களின் வளர்ச்சி குறையாது, மாறாக அதிகரிக்கும்” எனக் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.