“எத்தனை வெறுப்பைக் கக்கினாலும், நாம் முன்னேறிச் செல்வதே நம் வழி” – முதல்வர் ஸ்டாலினுக்கு விஜய் பதில்
யார் எவ்வளவு கூச்சலிட்டாலும், எப்படிக் கதறினாலும், எத்தகைய வெறுப்பும் வெளிப்படுத்தினாலும், நாம் முன்னேறிச் செல்வோம் என்று தவெக தலைவர் விஜய் கூறியுள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்ததாவது:
“நமது மதுரை மாநாட்டில் அறிவித்தபடி, ‘வாகை சூடும் வரலாறு திரும்புகிறது: உங்க விஜய் நான் வரேன்’ என்ற மக்கள் சந்திப்பை, பல அரசியல் திருப்புமுனைகளைக் கண்ட திருச்சியில், சனிக்கிழமை (13.09.2025) துவக்கினோம்.
எளிதாகக் கடக்கக்கூடிய தூரத்தையும், மக்கள் பெருங்கடலைப் போல் மணிநேரங்கள் தாண்டியே சென்ற சூழ்நிலையை நாடு நன்றாகவே கண்டது. இதையே நமது கொள்கை, அரசியல் எதிரிகளும் உணர்ந்திருப்பர்.
‘விஜய் வெளியே வரவே மாட்டார், மக்களை சந்திக்கவே மாட்டார்’ என்று வதந்தி பரப்பியவர்கள், இப்போது பல விதமாக புலம்பத் தொடங்கியுள்ளனர். இதற்கு முன்னதாகவே ஒப்புக்கொள்வது போல, தங்களது கதறலை “முப்பெரும் விழா” என்ற கடிதத்தின் மூலம் வெளிப்படுத்தியிருந்தனர்.
பழைய எதிரிகள் கழிந்தும், புதியவர்கள் வந்து கொண்டே இருப்பது பழந்தமிழ் வழக்கம் அல்லவா? அந்தக் கடிதத்தில் வெறுப்பும் விரக்தியும் நிறைந்த வார்த்தைகள் இடம் பெற்றிருந்தன.
வெளியில் ‘கொள்கை’ என்று பேசிக்கொண்டே, உள்ளுக்குள் பாஜகவுடன் தொடர்பு வைத்திருப்பது யார் என்பதை மக்கள் நன்றாகவே புரிந்துகொண்டுள்ளனர். அதேபோல், வாக்குறுதிகளை மழை போல் வழங்கி ஏமாற்றியும், ஆட்சிக்கு வந்ததும் உரிமைக்காகக் கேள்வி கேட்ட மக்களை அடக்குமுறையில் ஒடுக்கியதையும் தமிழகம் மறக்கவில்லை.
மக்கள் இப்போது கேட்கும் கேள்விகள்:
- தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில், அவர்களை அன்போடு அணுகியதா திமுக அரசு? இல்லை கைது செய்து ஒடுக்கினதா?
- அங்கன்வாடி பணியாளர்களை கனிவோடு அணுகினார்களா? இல்லை அவமானப்படுத்தினார்களா?
- மாற்றுத் திறனாளிகள் போராட்டத்தையும், விவசாயிகள் உரிமைக் கோரிக்கைகளையும் மதிக்காமல் நடந்தது யார்?
- பரந்தூர் விவசாயிகளை வஞ்சித்தது யார்? சாம்சங் தொழிலாளர்களின் போராட்டத்தை புறக்கணித்தது யார்?
- மீனவர்களின் கண்ணீரை துடைக்காமல் கைகட்டி நின்றது யார்?
- மருத்துவர்கள், செவிலியர்கள் போராட்டத்தில் அக்கறையில்லாமல் நடந்தது யார்?
இந்தக் கேள்விகளுக்கு மக்கள் தாமே பதில் சொல்லிவருகிறார்கள்.
மக்கள் விரும்பும் இயக்கம் உருவாகும் போதெல்லாம், கொள்கையற்ற கூட்டம் அதை குறை சொல்லாமல் இருப்பதே இல்லை. மாபெரும் மக்கள் சக்தியுடன் வந்த எம்ஜிஆரையும், “அரசியல் அரிச்சுவடி தெரியாதவர்” என்று சொன்னவர்களே இவர்கள்தான். இன்று அவர்கள் மாறிவிடுவார்களா?
பெண்கள், இளைஞர்கள், பொதுமக்கள் சக்தியுடன் எழுந்திருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தை குறை கூறாமல் இவர்கள் இருப்பது சாத்தியமா?
யாரேனும் எவ்வளவு கூப்பாடு போட்டாலும், எப்படிக் கதறினாலும், எத்தனை வெறுப்பும் வெளிப்படுத்தினாலும் நாம் முன்னேறிச் செல்வோம். “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற அடிப்படை கோட்பாட்டோடு, மதச்சார்பற்ற சமூகநீதியை இலக்காகக் கொண்டு நாம் பாதை வகுப்போம்.
தந்தை பெரியார், காமராஜர், அம்பேத்கர், வேலுநாச்சியார், அஞ்சலை அம்மாள் ஆகியோரின் வழிகாட்டுதலுடன் வெற்றிநடை போடுவோம். 2026 சட்டமன்றத் தேர்தலில், 1967, 1977 தேர்தல்களைப் போல, மக்கள் சக்தியின் பேராதரவுடன் வெற்றி பெறுவதை தமிழக வெற்றிக் கழகம் நிச்சயம் நிரூபிக்கும். நல்லதே நடக்கும், வெற்றி நிச்சயம்.”
இவ்வாறு விஜய் தெரிவித்துள்ளார்.