பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பில் முதல்வர் நல்ல முடிவு எடுப்பார்: அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன்

விருதுநகரில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய வருவாய்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன்,

“அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது தொடர்பில் முதல்வர் எப்போதும் நல்ல முடிவையே எடுப்பார்” என்று கூறினார்.

ஓரணியில் தமிழ்நாடு திட்டம்:

“திமுகவின் முன்னெடுப்பில் ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற திட்டத்தில் இதுவரை 1 கோடி குடும்பங்களைத் தாண்டியோர் இணைந்துள்ளனர். மாநிலம் முழுவதும் உள்ள 68 ஆயிரம் வாக்குச்சாவடிகளில், எங்கள் சாவடி முகவர்கள் வீடு தோறும் சென்று மக்களை பதிவு செய்து வருகின்றனர். மக்கள் முன்வைக்கும் கோரிக்கைகள் அரசின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டு தீர்வு காணப்படுகிறது.

மத்திய அரசு எங்கள் மொழி, இனம், பண்பாட்டை அழிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கு எதிராக மக்களை ஒன்றிணைக்கும் நோக்கத்துடன் இந்த திட்டத்தை முன்னெடுத்து வருகிறார் முதல்வர். நாளை அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு உறுதிமொழி ஏற்கும் நிகழ்வும் நடைபெறும்” என்றார்.

மக்களுடன் இணைந்த அரசு:

விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் 4.19 லட்சம் குடும்பங்கள் இந்த திட்டத்தில் இணைந்துள்ளதாகவும், மேலும் பலர் தொடர்ந்து சேர்ந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

“எங்குச் சென்றாலும் மக்கள் அரசை விமர்சிப்பதில்லை. அவர்கள் முதல்வருடன் இருக்கிறார்கள்; முதல்வரும் மக்களோடு இருக்கிறார். 20ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் பொதுக்கூட்டங்கள், 30ஆம் தேதி கரூரில் முப்பெரும் விழா நடைபெறும். ‘உங்களோடு ஸ்டாலின்’ முகாம்களில் பெரும்பாலான மனுக்கள் மகளிர் உரிமைத் தொகை தொடர்பானவையே. தகுதியுள்ள அனைவருக்கும் அந்தத் தொகை வழங்கப்படும்” என்று அவர் வலியுறுத்தினார்.

பழைய ஓய்வூதியத் திட்டம்:

“அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து குழு அமைக்கப்பட்டு, அது நிதித் துறையின் கவனத்தில் உள்ளது. தேர்தல் காலத்தில் நாங்கள் கூறியது போல, அந்தத் திட்டத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்ற எண்ணம் அரசுக்குண்டு. ஆனால், நிதிச் சுமை, கடன் வட்டி, ஊதிய செலவுகள் ஆகியவை மிகப்பெரிய சவாலாக உள்ளன.

இதை வழங்கக்கூடாது என்ற மனப்பான்மை முதல்வருக்கு எப்போதும் இல்லை. அதற்காகவே அரசு ஊழியர் சங்க பிரதிநிதிகளும் உள்ள குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவின் ஆலோசனையின் அடிப்படையில், முதல்வர் நிச்சயமாக நல்ல முடிவை எடுப்பார்” எனவும் அவர் தெரிவித்தார்.

Facebook Comments Box