அதிமுக ஒன்றுபட வேண்டும் எனக் கூறியதற்கு தொண்டர்களிடம் பெரும் வரவேற்பு: செங்கோட்டையன்
முன்னாள் அமைச்சர் மற்றும் கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ. செங்கோட்டையன், “அதிமுக ஒன்றுபட வேண்டும் என்ற எனது கருத்துக்கு தொண்டர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது” என தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் கரட்டூர் பகுதியில் உள்ள கட்சி அலுவலகத்தில் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு, செங்கோட்டையன் அண்ணா உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதே நிகழ்வில் தொண்டர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.
செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: “அண்ணாவின் ‘மறப்போம் மன்னிப்போம்’ என்ற வார்த்தைகள் நமக்கு வழிகாட்டும். முன்னாள் முதலல்வர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் கனவை நூறு ஆண்டுகளுக்குப் பூர்த்தி செய்யும் விதமாக இயக்கம் ஒன்றுபட வேண்டும் என நான் செப். 5-ல் மனம் திறந்தேன். இதற்கு தொண்டர்களிடையே பெரும் ஆதரவு கிடைத்துள்ளது. தொண்டர்கள் மற்றும் பொதுமக்களின் கருத்துகளை மனதில் வைத்து இயக்கம் வலிமை பெற வேண்டும். 2026-ல் வெற்றி பெறும் வழி அதிமுக ஒன்றுபடுவதாகும்”.