வக்பு சட்டம் | சில விதிகளுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை – முதல்வர் ஸ்டாலின் பாராட்டு
வக்பு சட்டத்தின் சில பிரிவுகளுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்ததை, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வரவேற்றுள்ளார்.
உச்சநீதிமன்றம் இன்று அளித்த உத்தரவின்படி,
- வக்புக்கு சொத்து அளிக்க, குறைந்தது 5 ஆண்டுகள் இஸ்லாமிய நடைமுறைகளை பின்பற்றியிருக்க வேண்டும் என்ற நிபந்தனைக்கு தடை.
- வக்பு நிலம் அரசு நிலம் என குற்றச்சாட்டு எழுந்தாலே, உரிய அதிகாரியின் அறிக்கை வரும் வரை அல்லது அரசு முடிவு எடுக்கும் வரை அச்சொத்தை பறிமுதல் செய்யும் அதிகாரத்துக்குத் தடை.
- “வக்பு பயனர்” பட்டியலில் இருந்து பெயரை நீக்கும் அதிகாரத்தை மாவட்ட ஆட்சியருக்கு வழங்கிய விதிக்குத் தடை.
- மத்திய வக்பு வாரியத்தில் 4-க்கும் மேற்பட்ட முஸ்லிம் அல்லாதோரை, மாநில வக்பு வாரியங்களில் 3-க்கும் மேற்பட்ட முஸ்லிம் அல்லாதோரை சேர்ப்பதற்கு தடை – இதன் மூலம் வாரியங்களில் முஸ்லிம்களின் பெரும்பான்மை நிலை பாதுகாக்கப்படும்.
இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் முதல்வர் ஸ்டாலின்,
“திமுக மற்றும் பிற மனுதாரர்கள் தாக்கல் செய்த வழக்கில், ஒன்றிய பாஜக அரசு கொண்டுவந்த சட்டத்திருத்தங்களுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அரசியலமைப்புக்கு முரணான பாஜகவின் நடவடிக்கையை தடுக்கும் வகையில் இது ஒரு முக்கிய முன்னேற்றமாகும்.
நாடாளுமன்றத்தில் இந்தச் சட்டத்திருத்தம் அறிமுகமான நாளிலிருந்தே திமுக எதிர்ப்பு தெரிவித்தது. தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியும், ஒன்றிய அரசின் முயற்சிக்கு எதிராக நாங்கள் குரல் கொடுத்தோம்.
இன்றைய தீர்ப்பு, முஸ்லிம்களின் மத உரிமைகள், அடிப்படை உரிமைகள் மற்றும் அரசியலமைப்பு சட்டத்தின் பாதுகாப்பு குறித்து மக்களிடம் இருக்கும் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தும்” எனக் குறிப்பிட்டார்.