“அரசியலில் சொகுசுக்கு இடமில்லை!” – ‘அன்புக் கரங்கள்’ திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின் உரை
“அரசியல் என்பது மக்கள் பணி; அது கடினமான பணி. எங்களைப் பொறுத்தவரை, இங்கு சொகுசுக்கு இடமில்லை” என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
பெற்றோரை இழந்த குழந்தைகளைக் காக்கவும், 18 வயது வரை கல்வி இடையூறு இல்லாமல் தொடரவும், அவர்களுக்கு மாதம் ரூ.2,000 உதவித் தொகை வழங்கும் ‘அன்புக் கரங்கள்’ திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று சென்னையில் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் உரையாற்றியபோது:
“இனிமேல் கவலைப்பட வேண்டாம்; உங்களை கவனிக்கவே இந்த அன்புக் கரங்கள் திட்டத்தை தொடங்கியுள்ளோம். நான் இருக்கிறேன்… உங்களை பத்திரமாக பார்த்துக் கொள்வேன்.
இன்று மிக முக்கியமான நாள் – அண்ணா பிறந்தநாள். நம்முடைய தமிழ்நாட்டுக்கு பெயர் சூட்டிய தலைவரின் பிறந்த நாள். ‘ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம்’ என்று திராவிட மாடல் ஆட்சிக்கு இலக்கணம் எழுதிய அண்ணாவின் பிறந்த நாளில் இந்தத் திட்டத்தை தொடங்குகிறோம். இங்கு குழந்தைகள் காட்டிய சிரிப்பே அண்ணாவுக்கு நாம் செலுத்தும் மரியாதை. இதனால் எனக்கு பெரும் மகிழ்ச்சி, மனநிறைவு.
திராவிட மாடல் என்றால் ‘எல்லோருக்கும் எல்லாம்’ என்பதே எளிய விளக்கம். ஆனால், அதை நடைமுறைப்படுத்துவது எளிதானதல்ல. ஒடுக்கப்பட்ட மக்களின் எழுச்சிதான் திராவிட இயக்கம். அதனால் மக்களோடு மக்களாக, மக்களின் குரலாக திமுக இன்றும் ஒலித்து வருகிறது. மக்களின் தேவைகளை ஆட்சிப் பொறுப்பில் நிறைவேற்றிக்கொண்டிருக்கிறோம். அரசியல் என்பது மக்கள் பணி; அது கடினமான பணி. எங்களுக்கு சொகுசுக்கு இடமில்லை.
நான் காலையில் ஒரு இடத்தில் மக்களோடு பேசுவேன்; மாலையில் நூறு கிலோமீட்டர் தாண்டி இன்னொரு ஊரில் இருப்பேன். இந்த உழைப்பை பெரியார், அண்ணா, கலைஞர் எங்களுக்கு கற்றுத்தந்தார்கள். அதனால்தான் ஒவ்வொரு மனிதரின் தேவையையும் புரிந்து செயல் பட முடிகிறது.
பலர் அரசியலைப் பற்றி தவறாக நினைக்கிறார்கள். பதவியில் இருந்தால் சில திட்டங்கள் செய்து, மீண்டும் தேர்தலுக்குத் தயாராக வேண்டும் என்று கருதுகிறார்கள். ஆனால் எங்களின் அடிப்படை “பதவி அல்ல; பொறுப்பு.” அதிகாரம் என்பது பொதுமகனுக்காக போராடுவதே.
இந்த அன்புக் கரங்கள் திட்டத்தின் மூலம் 6,082 குழந்தைகளுக்கு மாதந்தோறும் ரூ.2,000 வழங்கப்படும். இது வாக்கரசியலுக்காக அல்ல. காலையில் பசியுடன் பள்ளிக்கு வரும் குழந்தைகளைப் பார்த்து, காலை உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினேன். இன்று 21 லட்சம் குழந்தைகள் சுவையான உணவை தினமும் பெறுகிறார்கள். இது வாக்கரசியலுக்காக அல்ல.
சமூகத்தின் விளிம்பு நிலையில் உள்ள மாற்றுத்திறனாளிகள், திருநர்கள் ஆகியோருக்கும் தனிப்பட்ட திட்டங்களை நிறைவேற்றுகிறோம். இது வாக்கரசியலுக்காக அல்ல. கொரோனா காலத்தில் பெற்றோரை இழந்த 15,775 குழந்தைகளுக்கு ரூ.511 கோடி நிவாரணம் வழங்கினோம். இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ.3,000 மூன்று ஆண்டுகளாக வழங்கியுள்ளோம். பெண் குழந்தைகளுக்கு தற்காப்புப் பயிற்சிகள், தாய்ப்பால் வங்கிகள் மூலம் சிறப்பு கவனிப்புகள் – இவை எல்லாம் வாக்கரசியலுக்காக அல்ல.
வாக்கு என்பது மக்களின் நம்பிக்கையின் அடையாளம். அந்த நம்பிக்கையைப் பெற எங்களுக்கு கொள்கை, திட்டம், உழைப்பு இருக்கிறது. அதற்காகவே எங்களின் பொறுப்பு, கடைசி வரிசையில் உள்ள மக்களை உயர்த்துவது. அந்தக் கையாகவே என்னுடைய கை இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.
பெற்றோர் வேலைக்கு சென்றால் குழந்தைகளுக்கு காலை உணவு கொடுக்கிறோம்; பெற்றோரே இல்லாத குழந்தைகளுக்கு உதவி செய்ய வேண்டுமென எண்ணி உருவானதே இந்த அன்புக் கரங்கள் திட்டம்.
முதற்கட்டமாக 6,082 குழந்தைகள் கண்டறியப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பள்ளி படிப்பை முடிக்கும் வரை மாதம் ரூ.2,000 வழங்கப்படும். 18 வயது வரை கல்வி தொடர உதவி செய்யப்படும். பின்னர் கல்லூரிக் கல்வி, திறன் மேம்பாட்டு பயிற்சிகளும் வழங்கப்படும்.
நீங்கள் அனைவரும் படித்து முன்னேற வேண்டும்; அதுவே என் விருப்பம், எங்களின் இலட்சியம். அந்த இலட்சியத்தை நிறைவேற்றும் கரமே – அன்புக் கரம்” என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.