“தவெகவுக்கு எனர்ஜியும், இயல்பான ஆதரவும் இருக்கிறது” – கார்த்தி சிதம்பரம் எம்.பி.
மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காங்கிரஸ் எம்.பி. கார்த்தி ப.சிதம்பரம், “தவெகவுக்கு ஒரு தனி எனர்ஜியும், இயல்பான ஆதரவும் உள்ளது” என தெரிவித்தார்.
மதுரை செல்லூரில், முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் 80வது பிறந்த நாளை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் சிவகங்கை தொகுதி எம்.பி. கார்த்தி சிதம்பரம் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்:
“விஜய்யின் ரசிகர்களாக இருந்தவர்கள், அவர் கட்சி தொடங்கியதால் இனி ஆதரவாளர்களாக மாறுவார்கள். அதனால் எல்லா கட்சிகளுக்கும் ஒரு வகையில் பாதிப்பு ஏற்படும். எனினும், வரும் தேர்தலில் தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியே வெற்றி பெறும். ஏனெனில் இந்தக் கூட்டணி உறுதியான ஒற்றுமையுடனும், பெரும்பான்மை வாக்குகள் இணைந்தும் உள்ளது. சிறுபான்மை வாக்குகளை காங்கிரஸ் பெற்றுத் தரும்; எனவே இந்த கூட்டணிதான் வெற்றி பெறும்.
யார் கட்சி தொடங்கினாலும் ஆளும் அரசை விமர்சிப்பது இயல்பு. தவெகவுக்கு எனர்ஜியும், இயல்பான ஆதரவும் உள்ளது. ஆனால் அந்த ஆதரவு தேர்தலில் எத்தனை வாக்குகளாக மாறும், எத்தனை சீடுகளை வெல்லும் என்பதைக் கணிக்க முடியாது. எந்த அரசாக இருந்தாலும் பலன்களும் குறைகளும் இருக்கும். ஆனால் திமுக அரசு பல கோரிக்கைகளை நிறைவேற்றியுள்ளது; பெரிய குறைகள் எதுவும் இல்லை.
அதிமுக சுயாதீனமாக முடிவு எடுக்க முடியாத நிலை. அது தமிழக மக்களால் புறக்கணிக்கப்பட்ட பாஜகவின் துணைக் கட்சியாகி விட்டது. அதிமுகவுக்கு முன்னர் ஆளுமை மிக்க தலைவர்கள் இருந்தனர். இப்போது அதற்கு மாறுபட்ட தலைமையால், ஒற்றுமை குறைந்து, பிரச்சினைகள் வந்தால் உடனடியாக டெல்லியை நாடுகிறார்கள். இதனால் மக்களின் நம்பிக்கை குறைகிறது.
‘இரட்டை இலை’ வலிமையான சின்னம்தான், ஆனால் தலைமை குழப்பமும், பாஜகவோடு வைத்துள்ள கூட்டணியும் அதிமுகவுக்கு மைனஸாக உள்ளது. தமிழகத்தில் பாஜக கூட்டணி எந்தக் கட்சிக்கும் பலன் தராது என்பதே அரசியல் நியதி. அதிமுக அதற்குள் செல்வதால் வெற்றிடம் உருவாகிறது; அதை மற்ற கட்சிகள் நிரப்பும் வாய்ப்பு உண்டு.
கூட்டணி ஆட்சியைப் பெற வேண்டும் என்ற ஏக்கம் தமிழகத்தில் 1967 முதல் இருந்து வருகிறது. 2006-ல் வாய்ப்பு இருந்தும் பயன்படுத்தவில்லை. 2026-ல் கூட்டணி ஆட்சி வாய்ப்பு வந்தால் நிச்சயமாக பயன்படுத்துவோம்.
இந்தியா–பாகிஸ்தான் இடையே பிரச்சினைகள் இருந்தாலும், ராஜாங்க உறவு முறியவில்லை. அரசியலையும் கிரிக்கெட்டையும் கலக்கக் கூடாது.
மத்திய அரசு ஜிஎஸ்டியை ஆரம்பத்திலேயே குறைக்க வேண்டியது. தாமதமாக குறைத்தாலும் அதை வரவேற்கிறேன். உலகம் முழுவதும் ஜிஎஸ்டி, வாட் – இரண்டும் ஒரே மாதிரிதான். ஆனால் இந்தியாவில் 5, 18, 40 என மூன்று வித விகிதங்கள் உள்ளன; அவற்றை ஒரே விகிதமாக்க வேண்டும். உலகளவில் அத்தியாவசிய பொருட்களுக்கு ஜிஎஸ்டி இல்லை; நாமும் அந்த நிலையை நோக்கி செல்வோம் என நம்புகிறேன்” என்று கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.