திமுக சார்பில் ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பு – ‘தமிழகத்தை தலைகுனிய விடமாட்டோம்’ உறுதிமொழி

அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு, நேற்று மாநிலம் முழுவதும் திமுகவின் ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக, 68,000-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிக்குட்பட்ட பகுதிகளில் ‘தமிழகத்தை தலைகுனிய விடமாட்டோம்’ என்ற உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

ஜூலை 1 முதல் 70 நாட்களுக்கும் மேலாக நடைபெற்ற இந்த முன்னெடுப்பில், திமுகவின் 7 லட்சம் தொண்டர்கள் ஒரு கோடிக்கும் மேற்பட்ட குடும்பங்களை சந்தித்தனர். அதனைத் தொடர்ந்து, ஒவ்வொரு வாக்குச்சாவடி பகுதிகளிலும் இணைந்த குடும்பங்கள் உறுதிமொழி ஏற்பதில் பங்கேற்றனர்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்த நிகழ்வில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதிமொழி ஏற்பை தொடங்கி வைத்தார். அதேபோல், மாநிலம் முழுவதும் அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ., மாவட்டச் செயலாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

முக்கியமாக, கன்னியாகுமரியில் கனிமொழி எம்.பி., திருவண்ணாமலையில் அமைச்சர் எ.வ.வேலு, திருச்சுழியில் அமைச்சர் தங்கம் தென்னரசு, சைதாப்பேட்டையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், ஆவடியில் அமைச்சர் ஆவடி நாசர், திண்டுக்கல்லில் அமைச்சர் ஐ.பெரியசாமி, கடலூரில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், திருப்பத்தூரில் அமைச்சர் பெரியகருப்பன், புதுக்கோட்டையில் அமைச்சர் ரகுபதி ஆகியோர் தலைமையில் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இதில், நீட் விலக்கு, தொகுதி மறுவரையறை எதிர்ப்பு, வாக்காளர் பட்டியல் மோசடி, கல்வி நிதி மறுப்பு, தமிழ்த் தொன்மை இருட்டடிப்பு எதிர்ப்பு உள்ளிட்ட 5 முக்கிய உறுதிமொழிகள் ஏற்கப்பட்டன.

செப்டம்பர் 17ஆம் தேதி கரூரில் நடைபெறும் முப்பெரும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இதே உறுதிமொழி ஏற்பு நடைபெறவுள்ளது. மேலும், செப்டம்பர் 20 மற்றும் 21ஆம் தேதிகளில் மாவட்ட அளவிலான பொதுக்கூட்டங்களும் நடைபெறவுள்ளன.

Facebook Comments Box