நீலகிரி: ஒரே வீட்டு எண்ணில் 79 வாக்காளர்கள் – புகாரின் பேரில் அதிகாரிகள் ஆய்வு

நீலகிரி மாவட்டம் குன்னூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கோடேரி கிராமத்தில், ஒரே வீட்டு எண்ணில் 79 வாக்காளர்கள் இருப்பதாக வந்த புகாரைத் தொடர்ந்து, வட்டாட்சியர் ஜவகர் தலைமையில் அதிகாரிகள் நேரடி ஆய்வு மேற்கொண்டனர்.

குன்னூர் பாகம் 210-இல் உள்ள இறுதி வாக்காளர் பட்டியலை 12-வது வார்டு உறுப்பினர் மனோகரன் ஆய்வு செய்தபோது பல குறைகள் கண்டறியப்பட்டன. குறிப்பாக, 12 மற்றும் 17-வது வார்டுகள் மட்டுமே அந்த வாக்குச் சாவடிக்கு உட்பட்டிருந்தாலும், அதில் 11-வது வார்டும் சேர்க்கப்பட்டிருந்தது. மேலும், 9, 10-வது வார்டுகளின் வாக்காளர்களும் பட்டியலில் இடம்பெற்றிருந்தனர்.

இதில், வீட்டு எண் 10-ல் 9 பேர், வீட்டு எண் 9-ல் 14 பேர், வீட்டு எண் 11-ல் 79 பேர், வீட்டு எண் 12-ல் 33 பேர் என பதிவாகி, பெரும் குழப்பம் நிலவியது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பல்வேறு பகுதிகளில் சிதறியிருந்தனர். பல ஆண்டுகளுக்கு முன்பு வெளியேறியவர்களின் பெயர்களும் இன்னும் பட்டியலில் இருந்தது.

மனோகரன் கூறியதாவது: “818 வாக்காளர்கள் கொண்ட இந்த வாக்குச் சாவடியில் வார்டு வரையறை சரியாக செய்யாமல் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இது அலட்சியமா அல்லது தரவு பதிவேற்றச் செயல்முறையில் ஏற்பட்ட கவனக்குறைவா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். தவறுகளைச் சரி செய்ய தேர்தல் அதிகாரிகளுக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது” என்றார்.

இதேபோல், வட்டாட்சியர் ஜவகர் தெரிவித்ததாவது: “வாக்காளர் பட்டியலில் ஏற்பட்டுள்ள குழப்பங்களை சரிசெய்ய பார்ம்-8 மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, அவற்றின் அடிப்படையில் திருத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது” என்றார்.

Facebook Comments Box