“பழனிசாமி ஆட்சியை காப்பாற்றியது பாஜக அல்ல… அதிமுக எம்எல்ஏக்களே!” – டிடிவி தினகரன்
ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுக ஆட்சியை பாஜகதான் காப்பாற்றியது என்கிறார் பழனிசாமி. ஆனால் அவரது ஆட்சியை காப்பாற்றியது பாஜக அல்ல, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள்தான் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
தஞ்சையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தினகரன் கூறினார், “இப்போது நன்றியை பற்றி பழனிசாமி பேசுகிறார், இது சாத்தான் வேதம் ஓதுவதாக உள்ளது. ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுக ஆட்சியை பாஜகதான் காப்பாற்றியது என்கிறார் பழனிசாமி. ஆனால் அவரது ஆட்சியை காப்பாற்றியது பாஜக அல்ல, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள்தான். அப்போது எங்களின் 18 எம்எல்ஏக்கள் பழனிசாமியை மாற்றத்தான் ஆளுநரிடம் மனு கொடுத்தனர்; ஆட்சியை கவிழ்க்க மனு கொடுக்கவில்லை.
கூவத்தூரில் பழனிசாமியை முதல்வராக தேர்ந்தெடுக்க முடிவு செய்தபோது, என் பெயரை முதலில் அறிவிக்க வேண்டாம், அப்படி அறிவித்தால் கையெழுத்து போட மாட்டார்கள். எனவே எம்எல்ஏக்களிடம் கையெழுத்தை வாங்கி அறிவிக்க வேண்டும் என்று பழனிசாமி சொன்னார். பாஜகவுக்கு நன்றியோடு இருப்பேன் எனவும் அவர் கூறுகிறார். அப்புறம் ஏன் 2024 தேர்தலுக்கு முன்னர் பாஜக கூட்டணியை விட்டு வெளியே வந்தார்?
செங்கோட்டையன் கைக்கூலியாக செயல்படுவதாக பழனிசாமி சொல்கிறார். அவர் யாருடைய கைக்கூலியாக செயல்படுகிறார் என சொல்லட்டும். தோல்வி பயத்தில்தான் இபிஎஸ் முன்னுக்குப் பின் முரணாக உளறுகிறார். 2026 தேர்தலில் பழனிசாமியை தமிழக மக்கள் புறக்கணிப்பார்கள். அவர் படுதோல்வியடைவார்.
எந்த காரணத்தினாலும் துரோகத்தை ஏற்றுக்கொண்டு பழனிசாமியோடு சேரமாட்டோம். அவரின் பேச்சை டெல்லியில் இருப்பவர்கள் கேட்டுக் கொள்ளலாம். அவர்களுக்கு வேண்டுமானால், பழனிசாமியின் 20 சதவீத வாக்கு பெரிதாக தெரியும். வரும் தேர்தலில் அந்த 20 சதவீதம் 10 சதவீதத்துக்கு கீழ் குறையும்.
பழனிசாமியோடு கூட்டணி சேர இனி யாரும் வரமாட்டார்கள். தமிழகத்தில் நான்கு கூட்டணி அமையும்: திமுக கூட்டணி, என்டிஏ கூட்டணி, தவெக கூட்டணி மற்றும் தனித்து நின்ற சீமான் இப்போது கூட்டணி அமைக்கும் மனநிலையில் இருக்கிறார். எனவே பழனிசாமி இம்முறை படுபாதாளத்தில் தள்ளப்படுவார்.
டெல்லியில் உள்ளவர்கள் நம்மை தூக்கி நிறுத்திவிடுவார்கள் என நம்புவது தவறு. இம்முறை அதிமுக தோற்றால் அதற்கு தினகரன் காரணமல்ல. தவறுகளை திருத்திக்கொள்ளாதது அவர்களின் தவறு. நான் எப்போதும் பழனிசாமியோடு இணைய மாட்டேன். எல்லோருக்கும் துரோகம் செய்துள்ளார் பழனிசாமி. நன்றியை பற்றி பேச தகுதியற்ற நபர் பழனிசாமி. கடந்த தேர்தலில் தமிழகம் முழுவதும் பழனிசாமி தோற்கடிக்கப்பட்டதற்கு காரணம் தினகரன்தான். 2026 தேர்தலில் சிறப்பான கூட்டணியை அமைப்போம். அமமுக இடம்பெறும் கூட்டணிதான் தமிழகத்தில் ஆட்சியமைக்கும்” எனத் தெரிவித்தார்.