வாக்குச் சாவடிகளில் மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகளை உறுதிப்படுத்த சென்னை ஐகோர்ட் உத்தரவு

தேர்தலின்போது மாற்றுத் திறனாளிகள் வாக்குச் சாவடிகளை எளிதில் அணுகுவதற்கான வசதிகளை ஏற்படுத்தும் சட்ட விதிகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டுள்ளது.

2024 மக்களவை தேர்தலின்போது மாற்றுத் திறனாளிகள் வாக்குச் சாவடிகளை அணுகுவதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதா என ஆய்வு செய்த மாற்றுத் திறனாளிகள் அமைப்பு, விதிகள் முழுமையாக அமல்படுத்தப்படவில்லை எனக் குறிப்பிட்டது. இதையடுத்து, மாற்றுத் திறனாளியான வைஷ்ணவி ஜெயகுமார் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அமர்வில் விசாரிக்கப்பட்டது.

மனுதாரர் தரப்பில், “மாற்றுத் திறனாளிகள் சட்டத்தின் கீழ் வகுக்கப்பட்ட விதிகளை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டுள்ளது. வாக்குச் சாவடிகளை எளிதில் அணுக சாய்வுத் தளம் போன்ற வசதிகளை ஏற்படுத்த வேண்டும். மேலும், இணையதளம் கண்பார்வைக் குறைபாடுடையோர் பயன்படுத்தும் வகையில் மாற்றப்பட வேண்டும்” என வாதிடப்பட்டது.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், தேர்தல் ஆணையம் மாற்றுத் திறனாளிகள் சட்ட விதிகளை கட்டாயமாக அமல்படுத்த வேண்டும் என்றும், கடந்த தேர்தலில் அவை முழுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளதா என ஆய்வு செய்து விரிவான பதில்மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

வழக்கின் மேலான விசாரணை நான்கு வாரங்களுக்கு தள்ளிவைக்கப்பட்டது.

Facebook Comments Box