கோவை விமான நிலையத்தில் ‘பயணிகள் சேவை திருவிழா’: சிறப்பாக கலந்துகொண்ட ரஜினிகாந்த்!
இந்திய விமான நிலைய ஆணையம் (AAI) சார்பில் ‘பயணிகள் சேவை விழா’ எனும் சிறப்பு நிகழ்ச்சி இன்று கோவை விமான நிலையத்தில் நடைபெற்றது.
அதிகாலை விமானங்களில் இறங்கிய பயணிகளுக்கு கல்லூரி மாணவர்கள் இனிப்புகள் வழங்கி வரவேற்றனர். அதன் பின்னர் வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும், மருத்துவ பரிசோதனை முகாம், கண் பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது. காளப்பட்டி அரசு பள்ளி மற்றும் கேந்திர வித்யாலயா பள்ளி மாணவர்களுக்கு, விமானத் துறையில் உள்ள வேலை வாய்ப்புகள் குறித்தும் வல்லுநர்கள் ஆலோசனை வழங்கினர்.
நாள் முழுவதும் கல்லூரி மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. காலை முதல் மாலை வரை நடந்த இந்நிகழ்வுகள் பயணிகள் மத்தியில் சிறப்பான வரவேற்பைப் பெற்றன.
இதற்கிடையில், காலை 11.30 மணியளவில் சென்னையிலிருந்து கோவைக்கு வந்த விமானத்தில் நடிகர் ரஜினிகாந்த் வந்தார். அவரை கல்லூரி மாணவ, மாணவிகள் பூங்கொத்து வழங்கி அன்புடன் வரவேற்றனர். தொடர்ந்து, வளாகத்தில் நடந்த கலை நிகழ்ச்சிகளை ரஜினி ரசித்தார். அப்போது அங்கு வைக்கப்பட்டிருந்த பிரதமர் மோடியின் கட்-அவுட் முன், மாணவர்கள், விமான நிலைய அதிகாரிகள், ஊழியர்கள், பயணிகளுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
பின்னர் விமான நிலைய நுழைவாயிலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கேரளாவில் நடைபெறவுள்ள ‘ஜெயிலர் 2’ படப்பிடிப்பில் பங்கேற்க கோவை வந்துள்ளேன். அங்கு ஆறு நாட்கள் படப்பிடிப்பு நடைபெறும்” என்று தெரிவித்தார்.