பிரதமர் மோடியின் 75வது பிறந்தநாள்: ஆளுநர், முதல்வர் மற்றும் அரசியல் தலைவர்களின் வாழ்த்து
பிரதமர் நரேந்திர மோடியின் 75வது பிறந்தநாளை முன்னிட்டு ஆளுநர், முதல்வர் மற்றும் பல்வேறு கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். தமிழகம் முழுவதும் பாஜகவினர் நலத்திட்ட உதவிகளை வழங்கி, பிறந்தநாளை உற்சாகமாகக் கொண்டாடினர்.
ஆளுநர் ஆர்.என்.ரவி: “பிரதமர் மோடியின் தொலைநோக்கு தலைமையால் நமது தேசம் புதிய மாற்றங்களை கண்டுள்ளது. ஒவ்வொரு குடிமகனுக்கும், குறிப்பாக விளிம்பு நிலையில் உள்ள மக்களுக்கும், உள்ளடக்கிய வளர்ச்சியை வழங்கி வருகிறார். முன்னேற்றம் அடைந்த பாரதத்தை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள பிரதமருக்கு, தமிழக மக்களின் சார்பில் இதயம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துகள்.”
முதல்வர் மு.க. ஸ்டாலின்: “பிரதமர் மோடி ஆரோக்கியத்துடன், மகிழ்ச்சியுடனும், நீண்ட ஆயுளுடனும் வாழ வாழ்த்துகிறேன்.”
மத்திய இணை அமைச்சர் எல். முருகன்: “மக்களால் தொடர்ந்து மூன்றாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டு, பாரம்பரிய புகழ் பெற்ற நம் தேசத்தை சிறப்பாக வழிநடத்தி வரும் பிரதமர் மோடிக்கு, அன்பான பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.”
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி: “பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வை மற்றும் நாட்டுக்கான அர்ப்பணிப்பு, கோடிக்கணக்கான மக்களுக்கு தொடர்ந்து உற்சாகத்தை தருகிறது.”
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்: “மக்கள் சேவைக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்து, அனைவரின் முன்னேற்றத்திற்கும் பாடுபடும் தேசியவாதி பிரதமர் மோடி, நீண்ட நாள் வாழ்ந்து, பல்லாண்டுகள் தேசத்தை வழிநடத்த வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறேன்.”
மேலும், முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், பாமக தலைவர் அன்புமணி, தமாகா தலைவர் ஜி.கே. வாசன், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தர், பாஜக முன்னாள் தலைவர்கள் தமிழிசை சவுந்தரராஜன், அண்ணாமலை, நடிகர் ரஜினிகாந்த் ஆகியோரும் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.