வெலிங்டன் முப்படை அதிகாரிகள் பயிற்சி கல்லூரி முதல்வராக லெ.ஜெனரல் மணீஷ் எரி பொறுப்பேற்றார்

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள வெலிங்டன் முப்படை அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரியின் (Defence Services Staff College) புதிய முதல்வராக லெப்டினன்ட் ஜெனரல் மணீஷ் எரி பொறுப்பேற்றார். இதற்கு முன் இப்பொறுப்பில் இருந்த லெப்டினன்ட் ஜெனரல் வீரேந்திர வாட்ஸ், அதிகாரப்பூர்வமாக பொறுப்புகளை ஒப்படைத்தார்.

1905 ஆம் ஆண்டு குவெட்டாவில் நிறுவப்பட்ட இந்த கல்லூரி, இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு 1947ல் வெலிங்டனுக்கு மாற்றப்பட்டது. ராணுவம், கடற்படை, விமானப்படை அதிகாரிகள் மட்டுமின்றி நட்பு நாடுகளின் அதிகாரிகளுக்கும் தலைமைத்துவம், குழுவாகச் செயல்படுதல், வியூகம் வகுத்தல், நிர்வாகம் போன்ற துறைகளில் மேம்பட்ட பயிற்சி வழங்கும் நாட்டின் முன்னணி நிறுவனம் இதுவாகும்.

லெப்டினன்ட் ஜெனரல் மணீஷ் எரி, தேசிய பாதுகாப்பு அகாடமி (கடக்வாஸ்லா) மற்றும் இந்திய ராணுவ அகாடமி (டேராடூன்) முன்னாள் மாணவர். அவர் 1988 டிசம்பரில் ஜம்மு–காஷ்மீர் இலகு காலாட்படையில் அதிகாரியாக இணைந்தார்.

37 ஆண்டுகளுக்கும் மேலான ராணுவ அனுபவம் கொண்ட இவர், கிழக்கு லடாக்கின் சுஷுல் போன்ற அதிஉயரப் பகுதிகளிலும், வடக்கு பனிச்சிகரப் பகுதிகளிலும் பட்டாலியன்களை வழிநடத்தியுள்ளார். அதேபோல், கிழக்கு பிராந்தியத்தில் புதிய மலைப்பிரிவு பட்டாலியனை உருவாக்கியும், கஜ்ராஜ் படை வகுப்புக்கு தலைமை வகித்தும் உள்ளார்.

மேலும், தேசிய பாதுகாப்புப் படை தலைமையகத்தில் இன்ஸ்பெக்டர் ஜெனரல் (செயல்பாடுகள்), ராணுவ தென்மேற்கு ஆணையகத்தின் தலைமை நிர்வாக அதிகாரி, பாதுகாப்பு அமைச்சக தலைமையகத்தில் வியூகத் திட்டமிடல் பிரிவு தலைமை இயக்குநர் போன்ற முக்கிய பதவிகளில் பணியாற்றியுள்ளார்.

இந்திய ராணுவத்தின் பல விருதுகள் பெற்ற மூத்த அதிகாரியான ஜெனரல் மணீஷ் எரி, தற்போது தலைமை வகிக்கும் வெலிங்டன் கல்லூரியின் முன்னாள் மாணவரும் ஆவார். புதிய பொறுப்பில் உரையாற்றிய அவர், “முப்படை அதிகாரிகளுக்கான பாதுகாப்புக் கல்வி, ஒருங்கிணைந்த செயல்பாடு ஆகியவற்றில் சிறந்த பயிற்சிக் கல்லூரியாக இந்நிறுவனத்தை மேலும் மேம்படுத்துவேன்” என உறுதியளித்தார்.

Facebook Comments Box