விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு கர்ப்பிணிகள், குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள் வர வேண்டாம் – தவெக அறிவிப்பு
விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளில் கர்ப்பிணிப் பெண்கள், கைக்குழந்தையுடன் வரும் சகோதரிகள், முதியவர்கள், உடல்நலம் குன்றியோர், பள்ளி மாணவர்கள், சிறுமியர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் நேரில் பங்கேற்பதைத் தவிர்க்க வேண்டும் என, தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கேட்டுக் கொண்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:
“தவெக தலைவர் விஜய், தமிழகம் முழுவதும் மாவட்டங்களைச் சுற்றி மக்களை சந்தித்து வருகிறார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. மக்களை உயிரைப்போல் நேசிக்கும் அவர், தன்னைக் காதலிக்கும் மக்களின் பாதுகாப்பில் எந்த சமரசமும் செய்யாதவர். எனவே, இந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளின் போது தொண்டர்களும், பொதுமக்களும் பின்வரும் 12 வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
அவை:
- விஜய்யின் வாகனத்தை நிகழ்ச்சி வருகை, திரும்பிச் செல்லும் போதும் யாரும் இருசக்கர வாகனங்களில் அல்லது பிற வாகனங்களில் பின்தொடரக் கூடாது.
- நிகழ்ச்சி நடைபெறும் இடங்களில் உள்ள அரசு, தனியார் கட்டிடங்கள், சுவர்கள், மரங்கள், மின் கம்பங்கள், டிரான்ஸ்பார்மர்கள், வாகனங்கள், கொடிக்கம்பங்கள், சிலைகள் ஆகியவற்றின் அருகில் செல்லக் கூடாது. உயரமான இடங்களில் ஏறக்கூடாது.
- கர்ப்பிணிகள், கைக்குழந்தையுடன் வரும் சகோதரிகள், முதியவர்கள், நோயாளிகள், பள்ளிச் சிறுவர்கள், சிறுமியர், மாற்றுத் திறனாளிகள் நேரில் வராமல், வீட்டிலிருந்தே நேரலை மூலம் காணலாம்.
- நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்களில் ஆம்புலன்ஸ், பொதுமக்கள், மாணவர்கள், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள், நோயாளிகள் ஆகியோருக்கு எந்தப் போக்குவரத்து இடையூறும் இல்லாமல் ஒழுங்காக பங்கேற்க வேண்டும்.
- காவல்துறையின் அறிவுறுத்தலின்படி, அனைத்து வரவேற்பு நடவடிக்கைகளும் தவிர்க்கப்பட வேண்டும்.
- வாகனங்களை நிறுத்தும் போது பிறருக்கு இடையூறு ஏற்படாதவாறு பார்க்கிங் செய்ய வேண்டும்.
- சகோதர, சகோதரிகளாக அனைவரும் நடந்து கொள்ள வேண்டும். யாரையும் புண்படுத்தும் விதமாக பேசவோ நடக்கவோ கூடாது.
- சட்டம், ஒழுங்கை பேணும் விதமாக மிகுந்த கண்ணியத்துடன் நடந்து கொள்ள வேண்டும். கட்சிக்கு அவப்பெயர் உண்டாக்கும் முயற்சிகள் நடக்காமல் கவனிக்க வேண்டும்.
- நீதிமன்ற உத்தரவின்படி சாலைகளில் பிளக்ஸ், பேனர், வளைவு, கொடி போன்றவை உரிய அனுமதியின்றி வைக்கக் கூடாது.
- நிகழ்ச்சியின் போது பட்டாசு வெடிக்கக் கூடாது.
- காவல்துறை விதிகளுக்குள் மட்டுமே நடந்துகொள்ள வேண்டும்.
- நிகழ்ச்சி முடிந்தவுடன் அனைவரும் அமைதியாக, யாருக்கும் இடையூறு செய்யாமல் கலைந்து செல்ல வேண்டும்.
இந்த வழிகாட்டு நெறிமுறைகளை தொண்டர்கள், பொதுமக்கள் கடைப்பிடிப்பதால் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் வெற்றியடையும். மாவட்ட பொறுப்பாளர்களுக்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொண்டார்.
முன்னதாக, உயர் நீதிமன்றம் “கர்ப்பிணிகள், மாற்றுத் திறனாளிகள், குழந்தைகள், முதியவர்கள் கூட்டங்களுக்கு வருவதை விஜய் தடுக்க அறிவிக்கலாமே” எனக் கருத்து தெரிவித்தது. இதையடுத்து, அந்த யோசனையையும் சேர்த்தே தவெக 12 நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.