பாஜகவை தடுத்து நிறுத்தும் ஆற்றல் திமுகவுக்கு மட்டுமே இருக்கிறது: மக்களின் கேள்விகளுக்கு முதல்வர் ஸ்டாலின் பதில்
அனுபவம், வலிமை, கொள்கை தெளிவுடன் பாஜகவை தடுத்து நிறுத்தும் ஆற்றல் திமுகவுக்கு மட்டுமே இருக்கிறது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
மக்களுடன் ஸ்டாலின் செயலி வாயிலாக முதல்வர் ஸ்டாலினுக்கு பொதுமக்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதிலும் வருமாறு:
அண்மையில் மேற்கொண்ட வெளிநாட்டு பயண அனுபவங்கள் பற்றி சொல்ல முடியுமா, தொழில் முதலீட்டாளர்களிடம் தமிழகம் பற்றிய பார்வை எப்படி இருக்கிறது?
தமிழகத்தின் கட்டமைப்புகள், இங்குள்ள திறமையான இளைஞர்கள் பற்றியும், மாணவர்களுக்கு வழங்கப்படும் திறன் மேம்பாடு பயிற்சிகள் குறித்தும் ஜெர்மனி முதலீட்டாளர்களுக்கு காட்சி விளக்கங்கள் அளித்தோம். தமிழகத்தில் பெண்களுக்கு வேலைவாய்ப்பில் அளிக்கப்படும் முக்கியத்துவத்தை முதலீட்டாளர்கள் பெருமையுடன் கூறினார்கள். புதிதாக வளர்ந்து வரும் துறைகள் மீது தமிழகம் கவனம் செலுத்துவதையும் அவர்கள் அதிகமாகவே பாராட்டி பேசினார்கள். அந்தவகையில், தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் முதலீடுகள் செய்ய அவர்கள் ஆர்வமாக உள்ளனர்.
ஆக்ஸ்போர்டுக்கு சென்றது பற்றியும், வெளிநாடு வாழ் தமிழர்களைச் சந்தித்தது பற்றியும் உங்களின் அனுபவத்தைப் பகிர்ந்துகொள்ள முடியுமா?
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பெரியாரின் படத்தை திறந்து வைத்து, அவரை பற்றி பேசியபோது எனக்கு மெய்சிலிர்த்துவிட்டது. ஜெர்மனி, லண்டனில் உள்ள தமிழர்கள் பலர், இடஒதுக்கீட்டில் படித்து முன்னேறியவர்கள் என்றும், கருணாநிதி முதல் தலைமுறை பட்டதாரி கல்வி கடனை ரத்து செய்ததுதான் இந்தளவு முன்னேறி வரக் காரணம் என்றும் தெரிவித்தார்கள். பல மறக்க முடியாத அனுபவங்களை ஐரோப்பிய பயணம் கொடுத்துள்ளது.
நாட்டிலேயே இரட்டை இலக்க வளர்ச்சி பெற்ற ஒரே மாநிலம் தமிழகம் என்று சொல்கிறீர்கள், ஏன் அதற்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள்?
பலதுறை வளர்ச்சி, வேலைவாய்ப்பு, தனிநபர் வருமானம், மக்களின் வாழ்க்கை தரம் என்று அனைத்தையும் எடுத்துக்காட்டும் இண்டிகேட்டர்தான் ஜி.எஸ்.டி.பி. அதனால் தான் இது முக்கியத்துவம் பெறுகிறது. கடந்த 2011-16 காலக்கட்டத்தில் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி 6.7 சதவீதமாக இருந்தது. அதுவே 2016-21-ல் 5.2 சதவீதமாக குறைந்தது. இதேபோல், மற்ற மாநிலங்களிலும் பொருளாதார வளர்ச்சி ஒற்றை இலக்கத்தில் இருக்கும் போது, தமிழகம் 11.19 சதவீத வளர்ச்சியை சாத்தியப்படுத்தி உள்ளது.
தமிழகத்தை தலைகுனிய விடமாட்டேன் என்று எதற்கு சொல்கிறீர்கள்?
நீட், இந்தி திணிப்பு, கீழடி அறிக்கையை மறைப்பது என பாஜக தமிழகத்தை பல வகையில் குறி வைக்கிறது. பாஜகவை எதிர்ப்பதாக வெளியில் பலர் சொல்லிக்கொள்ளலாம். ஆனால், அனுபவம், வலிமை, கொள்கைத் தெளிவுடன் பாஜகவை தடுத்து நிறுத்தும் ஆற்றல் திமுகவிடம் மட்டும் தான் இருக்கிறது. திமுக ஆட்சி நீடித்தால் தான் தமிழகம் தொடர்ந்து தலைநிமிர்ந்து நடக்க முடியும்.
தாயுமானவர் – அன்புக்கரங்கள் என்று தொடர்ந்து புது புது திட்டங்களாக தொடங்கிக் கொண்டே இருக்கிறீர்களே?
திராவிட மாடல் ஆட்சியில் மகளிர் உரிமை தொகை, விடியல் பயணம், நான் முதல்வன் என ஏராளமான திட்டங்களைக் கொண்டு வந்திருக்கிறோம். இதில் பல திட்டங்களை மற்ற மாநிலங்களும் பின்பற்ற தொடங்கி இருக்கிறது. இவை தொடக்கம்தான். எங்களுக்கு இன்னும் நிறைய பணிகள் இருக்கின்றன. அதற்கான பணிகள் திராவிட மாடல் 2.0-விலும் தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.