பெண்களை எளிதில் வாதாடி ஜெயிக்க முடியாது: உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் புகழாரம்
“இயற்கையாகவே பெண்களுக்கு வாதாடும் திறமை உண்டு. அதனால் அவர்களை எளிதில் வாதாடி ஜெயிக்க முடியாது” என பெண் வழக்கறிஞர்கள் சங்க ஆண்டு விழாவில் பங்கேற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் புகழாரம் சூட்டினார்.
சென்னை உயர்நீதிமன்ற பெண் வழக்கறிஞர்கள் சங்கத்தின் 62ஆம் ஆண்டு விழா, உயர்நீதிமன்ற கலையரங்கில் நேற்று நடைபெற்றது. விழாவில் சங்கத் துணைத் தலைவர் ஆர். ராஜலட்சுமி வரவேற்றார். சங்கத் தலைவர் என்.எஸ். ரேவதி தலைமை வகித்தார். செயலாளர் ஏ. பர்வீன் ஆண்டறிக்கை வாசித்தார்.
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம். சுந்தரேஷ் பேசுகையில்:
- “எந்த சமுதாயத்தில் பெண்களின் நிலைப்பாடு உயர்ந்திருக்கிறதோ, அந்த சமுதாயமே உயர்ந்த சமுதாயம். அந்த வகையில் தமிழ் சமுதாயம் பெண்கள் சார்ந்த உயர்ந்த சமுதாயம்.
- பெண்களுக்கு இயற்கையாகவே வாதாடும் திறமை உண்டு. அவர்களை எளிதில் வாதாடி ஜெயிக்க முடியாது என்பதை வீட்டிலேயே தினமும் அனுபவித்து வருகிறோம்.
- பழங்காலத்திலேயே பெண்கள் கல்வியிலும் செல்வத்திலும் ஆண்களுக்கு நிகராக இருந்துள்ளனர். அதனால் தான் நீதித் துறையிலும் ‘நீதி தேவதை’, ‘நீதித் தாய்’ என புகழாரம் சூட்டுகிறோம்.
- தவறைச் சுட்டிக்காட்டும் போர்க் குணமும் பெண்களுக்கு உண்டு. பணிபுரியும் பெண்கள் வீட்டிலும், பணியிடங்களிலும் பல இன்னல்களை சந்திக்க நேரிடுகிறது. இது மாறும் காலம். அதற்கேற்ப நம்மை தயார் படுத்திக் கொள்ள வேண்டும்.
- பெண்கள் ஒளவையார் போல தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும். தற்போது விவாகரத்து வழக்குகள், சைபர் குற்றங்கள் போன்றவை அதிகரித்து வருகின்றன. இந்த சமூக மாற்றம் பெண் வழக்கறிஞர்களுக்கு அற்புதமான காலகட்டம்.
- பெண் வழக்கறிஞர்களுக்கு நீதிபதி பணியிடங்களில் உரிய இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அனைத்து தரப்புக்கும் பிரதிநிதித்துவம் வழங்க வேண்டியதால் சில சமயம் அதைச் செயல்படுத்த முடியாமல் போகிறது.” என்றார்.
மற்றொரு சிறப்பு விருந்தினரான உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர். மகாதேவன்:
- “பெண்கள் குடும்பத்தை மட்டுமே நிர்வகிக்க தெரிந்தவர்கள் எனக் கூறுவது வரலாற்றுப் பிழை.
- பெண் சமுதாயத்துக்கு ஆட்சி புரியவும் தெரியும் என்பதை 2000 ஆண்டுகளுக்கு முன்பே நிரூபித்துள்ளனர்.
- பல தடைகளை தாண்டி, இந்தியாவின் முதல் பெண் வழக்கறிஞராக பதிவு செய்தவர் கார்னிலியா.
- சமுதாயம் பெண்களை மதிக்க கற்றுக்கொண்டால்தான் நாடும் மண்ணும் உயரும் என்பது பாரதியின் கூற்று. அதற்கேற்ப பெண்கள் கல்வி, பொருளாதாரம், வேலை வாய்ப்பு என அனைத்திலும் மேலோங்க வேண்டும்.
- பெண் வழக்கறிஞர்களின் செயல்பாடுகள் அறிவு சார்ந்த வாய்ப்புகளை உருவாக்குவதாக இருக்க வேண்டும்.” என்றார்.
உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவஸ்தவா:
- “நாட்டிலேயே அதிக பெண் உறுப்பினர்கள் கொண்ட சங்கம் சென்னை உயர்நீதிமன்ற பெண் வழக்கறிஞர்கள் சங்கமே.
- தமிழக பெண்கள் ஆண்களுக்கு நிகராக பல்வேறு தடைகளைத் தாண்டி திறமைகளை வளர்த்து முன்னேறி வருகிறார்கள்” எனப் புகழாரம் சூட்டினார்.
நிகழ்வில் உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆர். சுரேஷ்குமார், அனிதா சுமந்த் ஆகியோரும் சிறப்பித்து பேசினர்.
இறுதியாக, நூலகர் மார்கரெட் லாரன்ஸ் நிகழ்வை தொகுத்து வழங்க, பொருளாளர் மணியம்மாள் நன்றி தெரிவித்தார்.