பிரதமர் மோடியின் தாயாரை அவமதித்ததாக ஆர்ஜேடி மீது பாஜக குற்றச்சாட்டு

பிரதமர் நரேந்திர மோடியின் தாயாரை ராஷ்டிரிய ஜனதா தள (ஆர்ஜேடி) கட்சியினர் அவமதித்ததாக பாஜக மீண்டும் குற்றம் சாட்டியுள்ளது. அதோடு, “ஒரு தாயை துஷ்பிரயோகம் செய்தவர்களை பிஹார் ஒருபோதும் மறக்காது” என்றும் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு இறுதியில் பிஹாரில் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் தேர்தல் களம் சூடுபிடித்து வருகிறது. இந்நிலையில், ஆர்ஜேடி சார்பில் நடந்த பேரணியில் பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி அவமதிக்கப்பட்டதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது. இதுகுறித்து ஒரு வீடியோவும் இணையத்தில் பரவி பேசுபொருளானது. மேலும், கட்சித் தொண்டர்களின் இந்த செயலை தேஜஸ்வி யாதவ் ஆதரித்ததாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து பிஹார் துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரி தனது எக்ஸ் தளத்தில், “தேஜஸ்வி யாதவ் மீண்டும் மோடியின் மறைந்த தாயாரை அவமதித்துள்ளார். அவர் பிஹாரின் கலாச்சாரத்தையே அவமதித்துள்ளார். இது தாய்மார்களின் உச்ச விரக்தியை தூண்டியுள்ளது. ஒரு தாயை துஷ்பிரயோகம் செய்தவர்களை பிஹார் ஒருபோதும் மன்னிக்காது. பிஹார் மக்கள் இந்த மோசமான அரசியலை புரிந்து கொண்டு, ஜனநாயக முறையில் பதிலளிப்பார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராயும் தேஜஸ்வி யாதவ் மீது கடுமையாக தாக்குதல் நடத்தியுள்ளார். அவர், தேஜஸ்வியை புராணக் கதாபாத்திரங்களான “கன்சா” மற்றும் “காலியா நாகம்” உடன் ஒப்பிட்டு, வாக்காளர்கள் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் தக்க பதிலடி கொடுப்பார்கள் என்றும் எச்சரித்தார்.

“தேஜஸ்வி யாதவின் ஆதரவாளர்கள் பிரதமர் மோடியையும் அவரது தாயாரையும் திட்டி பெரும் பாவம் செய்துள்ளனர். தேஜஸ்வி, கன்சாவைப் போல உங்களை அழிப்போம். பிஹார் மக்கள் விரைவில் தங்கள் வாக்குகள் மூலம் உங்களுக்கு பதிலடி கொடுப்பார்கள். நீங்கள் காலியா நாகம் போல விஷம் கக்குகிறீர்கள்” என்றும் அவர் தெரிவித்தார்.

Facebook Comments Box