ஏழைகளின் ‘டாக்டர்’ கனவை நனவாக்கும் 7.5% உள் இடஒதுக்கீடு: அரசு பள்ளி மாணவர்கள் 632 பேருக்கு மருத்துவம் படிக்கும் வாய்ப்பு

ஏழைகளின் ‘டாக்டர்’ கனவை தொடர்ந்து 6-வது ஆண்டாக நனவாக்கி வரும் 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின் மூலம், இந்த ஆண்டு அரசு பள்ளி மாணவர்கள் 632 பேருக்கு மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

நீட் தேர்வு அறிமுகமாகும் முன்பு, தமிழகத்தில் ஆண்டுதோறும் 40-க்கும் குறைவான அரசு பள்ளி மாணவர்களே மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்தனர். எடுத்துக்காட்டாக, 2014-15-ல் 38 பேரும், 2015-16-ல் 36 பேரும், 2016-17-ல் 34 அரசு பள்ளி மாணவர்களும் மட்டுமே மருத்துவம் படிக்கச் சேர்ந்துள்ளனர். இதைத் தமிழக அரசின் வேண்டுகோளின் பேரில் அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவின் அறிக்கை உறுதிப்படுத்துகிறது.

ஆனால், நீட் தேர்வுக்கு பிறகு இந்த எண்ணிக்கை ஒற்றை இலக்கமாக குறைந்தது. 2017-18-ல் 3 பேரும், 2018-19-ல் 5 பேரும், 2019-20-ல் 6 பேரும், 2020-21-ல் 11 அரசு பள்ளி மாணவர்களும் மட்டுமே சேர முடிந்தனர்.

அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவக் கனவைப் பாதுகாக்கும் நோக்கில், 2020-ல் அப்போதைய அதிமுக அரசு 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டை அறிவித்து, படிப்புக்கான முழுச் செலவையும் அரசு ஏற்கும் என உறுதியளித்தது. இந்தத் திட்டம் ஏழை மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. பின்னர் ஆட்சிக்கு வந்த திமுக அரசு இதைத் தொடர்ந்து செயல்படுத்தி, பொறியியல், கால்நடை, ஆயுஷ், சட்டம், வேளாண் போன்ற படிப்புகளுக்கும் விரிவுபடுத்தியது.

இதன் பலனாக, அரசு பள்ளி மாணவர்கள் பெருமளவில் உயர்கல்வியில் சேரத் தொடங்கினர். குறிப்பாக, 2020-21-ல் 435 பேரும், 2021-22-ல் 555 பேரும், 2022-23-ல் 584 பேரும், 2023-24-ல் 625 பேரும், 2024-25-ல் 625 பேரும் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளில் சேர்ந்து உள்ளனர்.

இந்த ஆண்டில் முதல் சுற்று கலந்தாய்வில் 613 அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவம் படிக்க இடம் பெற்றுள்ளனர். இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடைபெற்று வரும் நிலையில், மேலும் 19 மாணவர்கள் இடம் பெறவுள்ளனர். இதனால், மொத்தம் 632 அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவக் கல்வியில் சேரவுள்ளனர்.

7.5 சதவீத உள் இடஒதுக்கீடு கடந்த 6 ஆண்டுகளாக கூலித்தொழிலாளிகள், வீட்டு வேலைக்காரர்கள், சிறு விவசாயிகள் போன்ற ஏழை மக்களின் பிள்ளைகளின் ‘டாக்டர்’ கனவை நனவாக்கி வருகிறது.

Facebook Comments Box