காவிரி டெல்டா பகுதியில் மீண்டும் ஷேல் காஸ் ஆய்வு கிணறுகள்: தடுத்து நிறுத்த தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வலியுறுத்தல்

தமிழக அரசின் தடையை மீறி காவிரி டெல்டாவில் மீண்டும் ஷேல் காஸ் ஆய்வுக் கிணறுகள் தோண்டப்பட்டுள்ளன. இதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக, அந்த இயக்கத்தின் சூழலியல் உபக் குழு ஒருங்கிணைப்பாளர் வி.சேதுராமன் தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: காவிரி டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக 2020-ல் அறிவிக்கப்பட்டது. அண்மையில் வெளிவந்த மத்திய எரிசக்தி இயக்ககத்தின் 2024-25 ஆண்டறிக்கையில், ஹைட்ரோ கார்பன் திட்டங்களை தொடர்ந்து நிறைவேற்ற மத்திய அரசு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

கடந்த 3 ஆண்டுகளில் பெயர் குறிப்பிடாமல் காவிரி டெல்டாவில் 3 இடங்களில் ஷேல் காஸ் ஆய்வுக் கிணறுகள் அமைக்கப்பட்டதாக எரிசக்தி இயக்கக அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், இந்த ஆண்டு வெளியான அறிக்கையில் பெரியகுடி, திருவாரூர், அன்னவாசநல்லூர் ஆகிய இடங்களில் ஷேல் காஸ் ஆய்வுக் கிணறுகளை ஓஎன்ஜிசி நிறுவனம் அமைத்துள்ளது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

மறைமுகமாக தோண்டப்பட்டுள்ள இதன் மூலம், ஓஎன்ஜிசி நிறுவனம் தனது முந்தைய அறிவிப்புக்கு மாறாக, நீரியல் விரிசல் முறையில் மட்டுமே செய்யக்கூடிய ஷேல் காஸ் ஆய்வுக் கிணறுகளை மறைமுகமாக தோண்டியிருப்பது அம்பலமாக உள்ளது. இது தமிழக அரசால் கொண்டு வரப்பட்ட பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலச் சட்டத்திற்கு முற்றிலும் புறம்பானது.

எனவே, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலையிட்டு, உடனடியாக ஓஎன்ஜிசி நிறுவனத்தின் தற்போதைய நடவடிக்கைகள் மற்றும் விதிகளுக்குப் புறம்பாக 3 ஷேல் காஸ் ஆய்வுக் கிணறுகள் தோண்டப்பட்டிருப்பதை ஆய்வு செய்ய உயர்நிலை வல்லுநர் குழு அமைத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதேபோல், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் மத்திய அரசு செயல்படுத்தும் மன்னார்குடி மீத்தேன் திட்டம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கொண்டுவரப்பட்ட எண்ணெய் எரிவாயு திட்டங்களையும் முற்றிலும் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சூழலியல் உபக் குழு இணை ஒருங்கிணைப்பாளர் ஆர்.ராஜ்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Facebook Comments Box